பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘கற்றிலானாயினுங் கேட்க’ என்றார் வள்ளுவர். அதைப்போல் ‘படிப்பிலனாயினும் பார்க்க’ எனலாம். இளைஞர்கள் நடிப்பு நடனம் போன்றவைகளைப் பார்த்து அனுபவிக்க விரும்புவது போல் அவைகளினூடாக வரும் கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேள்வியறிவு பேரறிவைத் தரவல்லது – பார்த்துப் பெறுமனுபவங்கள் பாரிற் சிறக்க வழிசெய்யும்; புத்தகத்தையே தொடாத – படிக்காத சில பாமரமக்கள் கேள்வியறிவினாலும் வாழ்க்கையனுபவத்தாலும் உயர்வதைப் பார்க்கிறோம். கல்வியாற் பெற்ற உண்மைகளோடு காட்சியாலும் கேள்விகளாலும் பெறும் கருத்துக்களும் உலகியல் வாழ்க்கைக்கு உறுதுணையாய் நின்று உதவக் கூடியன; கலைகள் காட்டும் கருத்துக்களிலே கழிப்பதைக் கழித்துக் கொள்வதைக் கொள்ள வேண்டும். உலகப் பெரியார் சொன்னதைப் போல் குணம் நாடிக் குற்றம் களைய வேண்டும். வாழ்வுக்குப் பயன் அளிக்காத – வாழ்வையே அழிக்கக் கூடிய சில கருத்துக்கள் சுவையுடன் வெளிப்படுத்திப் படுவதால் இளைஞர்களை அவை ஈர்த்து விடுகின்றன. கள்ளமோ களங்கமோ இல்லாத வெள்ளை உள்ளங்கள் அக்கருத்து வழிச் சென்று வாழ்வின் பயனை அனுபவிக்காது அல்லலுறுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களை நற்கருத்துக்கள் பிணிக்கவேண்டும். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் – ஈதல் இசைபட வாழ்தல் – இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்தல் காலத்தினாற் செய்யும் உதவி – அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் – அறனெனப் பட்டதே வாழ்வு – ஒன்றே குலம் ஒருவனே தேவனும் போன்ற வேண்டப்படும் கருத்துக்கள் கலைகளின் மூலம் புகுத்தப்பட வேண்டும்.


நல்லெண்ணமும், நல்லுறவும் நற்சிந்தனையும் நாடு முழுவதும் பரவப் பெருகக் கலைகள் பயன்பட வேண்டும். அறிவைத் தேடிக் கொள்ளாதவர்கள் வாழ முடியாது அவதிப்படுகிறார்கள். அதிகம் படித்தவர்கள் திக்கு முக்காடுகிறார்கள். நடுத்தரப் பிரிவினர் இரண்டுங் கெட்ட நிலையில்