பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உள்ளது. நினைவில் நீங்கா வடுப்படுத்திய நிகழ்ச்சி, அயோத்தியில் நடந்த நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“வணங்கு துறைகள் பலப்பல ஆக்கி” – என்பது ஆழ்வார் திருவாக்கு. ”இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி” என்பது அப்பரடிகள் வாக்கு, கடவுள் ஒருவரே! இதுவா? அதுவா? என்றால் விவாதம் வளரும். இதுவே அது. அதுவே இது என்ற நம்பிக்கையே சரி,


        “தென்னாடுடைய சிவனே போற்றி!
        எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!”

என்று மாணிக்கவாசகர் அருளியதை அறிக.


“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே, நின் விளையாட்டல்லால்
மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரளாய் வயங்கிற்றம்மா”

என்றார் தாயுமானார். இந்து சமுதாயம் இப்படி நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றி வந்த சகிப்புத்தன்மை – சமயப்பொறை ஆகிய உயிர்க் கொள்கைகளுக்கு ஆபத்துத் தந்த ஆண்டு! இந்தியா ஓரணியில் திரண்டு நின்றது, மத நல்லிணக்கத்தைப் பேண – மனித நேயத்தைப் பாதுகாக்க!

இந்தப் புத்தாண்டு தினத்தன்று நாம் கவனமாகச் சிந்திக்க வேணடும். நாட்டு மக்களின் மெளனத்தைக் கலைக்க வேண்டும்: நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிப் பேச வேண்டும். நாட்டின் நலன், சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் பற்றிப் பேச வேண்டும்; திரும்பத் திரும்பப் பேச வேண்டும். ஒருநாட்டு மக்கள் எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறார்களோ, அந்தத் திசையினை நோக்கி நாடு நகரும். நாட்டின் முன் எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. நாடு முழுவதும் ஏதோ ஒருவிதமான மூளைச்