பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

507


அழ கூட்டுகின்றனர்! அறிஞர்கள் ஆய்வுரை கூறுகின்றனர். அர்ச்சகர்கள் அன்னை பராசக்தியை அகங்கொண்டு, மலர் கொண்டு அர்ச்சிக்கின்றனர். அன்னை பராசக்தி கடைக்கண் பாலிக்கின்றாள். இத்தகு வாய்ப்பு வேறு எத்திரு விழாவிற்குத்தான் இருக்கிறது!

நவராத்திரி விழாக்காலத்தில் வீடுகளில் கொலு வைப்பதுண்டு. கலைப் பொருள்கள் ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவைகளைச் சேர்த்து அழகுற அமைத்துக் கொலுக் காட்சியைப் படைக்கின்றனர். அடுக்கி வைக்கப் பெற்ற கொலு கண்ணுக்கும் விருந்து – கருத்துக்கும் விருந்து சமய நிகழ்ச்சிகள் அல்லது சடங்குகள், தத்துவங்கள் சார்புடைய கருத்துக்களின் வெளிப்படைப்பேயாகும். வாழ்க்கை ஒரு அடுக்கிவைக்கப் பெற்ற கொலுபோல, பொன்னால், பொருளால் புகழால் வாழ்க்கை அடுக்கி வைக்கப்பெற்ற கொலுப் போல காட்சியளிக்கலாம். ஆனாலும், அது நிரந்தரமான தன்று. என்றோ ஒரு நாள் அது கவலைப்பட வேண்டியதே. "சா நாளும், வாணாளும் யாரறிவார் நன்னெஞ்சே” என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. ஆதலால், அடுக்கி வைக்கப் பெற்ற கொலு கலைவதற்கு அல்லது கலைக்கப் பெறுவதற்கு முன்னால் வாழ்க்கையை வெற்றியுடையதாக்கிக் கொள்ள வேண்டும்! அதாவது, பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும். இங்கே பயன் என்று குறிப்பிடப்படுவது, வாழ்க்கையை முழுமைப்படுத்திக் கொள்வதேயாகும். இந்த ஆழ்ந்தகன்ற சித்தாந்தத்தை விளக்குவதே நவராத்திரிக் கொலு.

அடுத்து, கொலுவுக்கு அழ கூட்டுவது மனிதனின் திறமையேயாம். கல்லைக் கவின்தரு சிலையாக ஆக்குவதும், கூடும் அன்பினில் கும்பிடத்தக்க தெய்வமாக்குவதும் மனிதனின் ஆற்றல்தான். ஆதலால், ஆற்றலைப் பெருக்கி வளர்த்து உலகத்தை வளப்படுத்தி அழகுப்படுத்துவதன் மூலம் வையத்தை வாட்டும் துன்பத்திலிருந்து இவ்வையத்தை