பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

509


காண்கிறோம். அது போலவே, நமது அன்னை பராசக்தி உலகத்தைத் துன்புறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரனை வெற்றி காண ஒன்பது நாட்கள் நோன்பிருந்து போராடி வெற்றி பெற்றாள் என்பதே வரலாறு. எல்லாம் வல்ல பராசக்தி நோன்பிருந்து தவம் செய்தது ஏன்? தான் செய்து காட்டுவது பிறரைச் செய்யும்படி செய்வதற்கு சுலபமான வழி சொல்லிச் செய்யும்படி செய்வதைவிட செய்து காட்டிச் செய்யும்படி செய்வதே நாகரிகமுறை. நாம் இந்த நவராத்திரி விழாக் காலத்தில் நிறையச் சொல்வதைவிடச் சிலவற்றையாவது செய்ய முயற்சிக்க வேண்டும். நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிற கலியுகத் துன்பத்தை மாற்றியமைக்க வேண்டும்! பசியும் பகையும் நீங்கி அன்பும் பண்பும் பெருகி வளர வேண்டும்! மனித உள்ளங்கள் அழகிலும் கலையிலும் ஈடுபட வேண்டும்! மீண்டும் அன்னை பராசக்தியின் திருவுள்ளத் திற்கு அபிராமி பட்டர் அருளிய கீழ்க்கண்ட பிரார்த்தனையை நினைவு படுத்துவோமாக!

தனந்தரும் கல்விதரும்
        ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வவடிவும்
        தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனந்தரும் நல்லன எலாம் தரும்
        அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்
        அபிராமி கடைக்கண்களே.

72. [1]தீபாவளிச் சிந்தனைகள்

இருளே உலகத்தியற்கை இருளை அறவே அகற்றும் முயற்சி இதுவரையில் வெற்றி பெறவில்லை. ஒளியை ஏற்றும்


  1. மதுரை வானொலி 21.9.94