பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயற்சி அறிவு தொடங்கிய நாள் தொட்டு நடைபெற்று வருகிறது. ஒளியைக் கொணரும் முயற்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் மகத்தான வெற்றி பெற்று, மின்னொளி மூலம் புவிக்கோளத்தை ஒளிமயமாக்கினார். ஆயினும் இருள் முற்றிலும் அகன்ற பாடில்லை.

நாம் மின்னொளியில் உட்கார்ந்து தான் எழுதிக் கொண்டிருக்கின்றோம். எழுதும் பேனாவின் பின்பகுதி நிழல் இருட்டு! இருள் திணிந்தது. ஒளிவரும் பொழுது, இருள் அடங்குகிறது; ஒளிகிறது. அவ்வளவுதான்! ஒளி அகன்றவுடன் இருள் சூழ்ந்து கொள்ளும்! ஆதலால், ஒளியை ஏற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். ஏற்றிய ஒளியை அணையாமல் பாதுகாக்க வேண்டும். இதுவே, தீபாவளி தரும் படிப்பினை! ஒளிதரும் விளக்குகளின் அழகுமிக்க அணிவரிசையே தீபாவளி! ஆனால், நமது தமிழ் நாட்டில் தீபாவளி நாளன்று ஒளிவிளக்குகள் ஏற்றும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. ஒளி! ஒளி! ஒளிமயமான உலகம் தோன்றட்டும்! இதுவே, தீபாவளியின் செய்தி!

ஒளிவகை இரண்டு. ஒன்று புறவிருள் நீக்கும் ஒளி! மற்றொன்று அகவிருளாகிய அறியாமையை அகற்றும் அறிவொளி! இன்று நமது நாட்டில் எங்கும் எத்திசையிலும் கேட்கும் ஒலி அறிவொளி! அறியாமை இருளைவிடக் கொடியது! இருள், இருள் என்று தெரிகிறது. அறியாமை என்பது அறியாமையே என்று ஒரு சிலருக்குத்தான் தெரியும். பலருக்கு அறியாமை அறிவுபோலத் தோன்றும். அறியாமையையே அறிவெனக் கருதிக் கொண்டு ஆர்ப்பரவம் செய்வர். இதனைப் புல்லறிவு என்று திருக்குறள் பேசும். இன்று, நம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்களுக்கெல்லாம் அறியாமையே காரணம் அறிவு என்பது தொடரும் ஒன்று. ‘அறிவு முற்றிற்று’ என்று கூறமுடியாது. ‘அறிதோறும் அறியாமை’ என்று திருக்குறள் கூறும். எழுத, படிக்கத் தெரிந்துகொண்டால் போதாது. நல்ல தரமான நூல்களைக்