பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

37


நலனுக்காகச் செயல்படுகிறோம். சாதாரண மக்கள் மாத்திரமே இப்படியல்ல-தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதி களிலும்கூடப் பலர் இவ்வண்ணமே வாழுகிறார்கள். தேர்தல், ஒருவகைப் பயிற்சியேயாகும். தேர்தல்வழி சமூக ஒப்புரவுப் பழக்கவழக்கங்கள் மலர்ந்து உருப்பெற வேண்டும்.

தேர்தல் கருத்து வழிப்பட்ட புரட்சி இயக்கமாகும். தேர்தலில் பகைமையைக் காட்டுகிறவர்கள் மக்களாட்சிப் பண்பைப் பொறுத்த வரையில் சிறு பிள்ளைகளாகவே கருதப் பெறுவார்கள். மற்றவர்கள் கருத்தைக் கேட்க மறுப்பவர்கள்-சிந்திக்க மறுப்பவர்கள் மக்களாட்சி முறைக்குத் தகுதி யுடையவர்கள் அல்லர். மற்றவர் கருத்தில் நியாயமிருக்கிறது என்று தெரிந்திருந்தும் கட்சிக்காக-வெற்றிக்காக மறைத்துப் பேசுகின்றவர்கள் மிகவும் பொல்லாதவர்கள். தேர்தலில், தம்முடைய கருத்தை-தாம் இந்தச் சமுதாயத்திற்காக வழங்கும் திட்டங்களை முன்வைத்தே வாக்குகளைக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய பலவீனத்தால் வெற்றி பெறுவது தன்னுடைய கருத்து வலிமையைக் காட்டாது. வெற்றி பெறுவது வளர்ந்த முழுநிறைவான ஜனநாயகமுமாகாது. ஜனநாயகம் என்பது உயர்ந்த-ஆழமான-தூயதத்துவம். அங்கு தனிமனித ஆதிபத்தியத்திற்கு இடமில்லை. நம்முடைய நாட்டை நாம் ஆளுந்தகுதி யுடையதாக்குவது நம்முடைய வாக்குரிமை. சுதந்திர நாட்டில் வாக்குரிமை பெற்றிருப்பதும், அவ்வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்துவதும் வாழ்க்கையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. வாக்குரிமையைப் பெறாமலேயே பலர் வாழுகின்றார்கள். அவர்கள் அடிமைகளாகவே வாழ விரும்புகின்றார்கள். வாக்குரிமை பெற்றிருந்தும் அதைப் பயன்படுத்தாதவர்கள் வாழ்ந்தும் வாழாதவர்களாகவே கருதப் பெறுவார்கள். வாக்குரிமையைச் சில இடங்களில் காசுக்கு விற்கிறார்கள். ஐயகோ! என்ன கொடுமை! பெற்ற தாயைக் காசுக்கு விற்கும் கொடுமையினுங் கொடுமை வாக்குரிமையைக் காசுக்கு

கு. XIII.4.