பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

515



74. [1]போகிச் சிந்தனைகள்

போகி என்பது போக்கல் என்ற பொருளில் அமைந்த வழக்காக இருக்கக் கூடும். அதாவது குடியிருக்கும் ஊர்களில் உள்ள குப்பைகள், குடியிருக்கும் வீடுகளில் உள்ள குப்பைகள் – அழுக்குகள் போக வேண்டும். சுற்றுப்புறச் சூழல் தூய்மை, பாதுகாப்பு என்ற சிந்தனை தமிழருக்குப் பழைமையானது. ஆதலால், பொங்கலுக்கு முதல் நாள் வீட்டைச் சுத்தம் செய்கின்றனர். சிவப்புப் பட்டை அடிக்கின்றனர்; அழகூட்டுகின்றனர்.

போகி என்ற சொல்வழி, சுற்றுப்புறத் தூய்மை மட்டுமல்ல. மனத்தூய்மையும் நினைவுக்கு வருகிறது. வீதியிலும் வீட்டிலும் மட்டுந்தானா நாள்தோறும் அழுக்குச் சேர்கிறது? நம் மனத்திலும் எத்தனை எத்தனை தூய்மைக் கேடுகள், அழுக்குகள் சேர்கின்றன; “மனத்தது மாசு” என்பார் திருவள்ளுவர். "அழுக்கு மனத்தொடு” என்பார் சுந்தரர். மனத்தில் உள்ள அழுக்குகளையும் அகற்ற வேண்டும். மனத்து அழுக்குகளைத் திருக்குறள் பட்டியலிட்டுக் காட்டுகிறது! அவற்றுள் சில அழுக்காறு, அவா, வெகுளி, பாழ்படுத்தும் உட்பகை முதலியனவாம்! இந்த மன அழுக்குகள் எல்லாம் அகன்றால்தான் மனிதன் உருவத்தில் மட்டும் மனிதனாக இல்லாமல் மனிதனாகவே வாழ இயலும். மனிதன் கூடித் தொழில் செய்வான்; கூடி வாழ்வான்!

அழுக்காற்றினைப் “பாவி” என்று திட்டுகின்றார் திருவள்ளுவர். மற்றவர்கள் அடைவது பொறுக்கமாட்டாமல் புழுங்குவது அழுக்காறு. நல்ல காரியங்களில் பொறாமைப்படலாம் என்று சிலர் அமைதி கூறுகின்றனர். அதுவும் தவறு. அழுக்காறுடையான் மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் கூடக் காணப் பெறாதவன் ஆயிரம் குற்றம்


  1. மதுரை வானொலி 14.1.95