பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

517



இவையெல்லாம் ஒருங்கே அமையின் போகமும் இன்பமும் தழுவிய வாழ்க்கையும் அமையும். போகி, இன்ப வாழ்க்கைக்குரிய வாயில்! ஆம்! தை பிறந்து விட்டது! அறுவடையும் முடிந்து விட்டது! களஞ்சியங்கள் நிறைந்துள்ளன. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் இல்வாழ்கை! திருமணமாகாதவர்களுக்குத் தை மாதத்தில்தான் வழி பிறக்கிறது! காதலும் களிப்பும் கலந்த வாழ்க்கை!

ஆண்டில் – முதலில் சமூக விழா, மஞ்சு விரட்டு, ஏறு தழுவல் விழா! அடுத்துத் திருக்கோயில்களில் தைப்பூச விழா! பழந்தமிழர் வாழ்க்கையில் தைப்பூச விழா, புகழ்பெற்ற திருவிழா! “தைப் பூசம் காணாது போதியோ பூம்பாவாய்!” என்று திருஞான சம்பந்தர் பாடுகின்றார்! திருக்கோயில்களிலும் தைப்பூசத் தேர்விழா!

போகி, கழிப்பன கழித்துச் சேர்ப்பன சேர்க்கும் நாள்! இன்ப வாழ்க்கைக்குக் கட்டியம் கூறும் நல்ல நாள். புது மனிதராக மாறுவோம்! புதியதோர் உலகம் அமைப்போம்!

75. [1]பொங்கல் வாழ்த்து

வீட்டைப் புதுமைப்படுத்துவோம்
சமூகத்தைச் சீரமைப்போம்!
சந்தர்ப்பங்களைச் சமமாக்குவோம்.
புதுப்பானை தேடுவோம்!
புதிய சிந்தனையைத் தேடுவோம்.
அடுப்பில் பொங்கல் பானை!
வாழ்வெனும் அடுப்பில் நாம்!

எரியும் விறகு – கொழுந்து விட்டெரியும் இலட்சியத் தி! பால் பொங்குகிறது – அறிவு பொதுளுகிறது!


  1. குமுதம் 1.1.1992

கு.XIII.34.