பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

519


செலவுகளும் இல்லை. பொருந்தா உணவு வகைகளும் இல்லை.

தமிழர் திருநாள் – பொங்கல் விழா நான்கு நாள்கள் நடைபெறுகின்றன. முதல் நாள், குடியிருக்கும் வீட்டையும் சுற்றுப் புறங்களையும் தூய்மை செய்வது நடைபெறும். வீடுகள் சுண்ணாம்பு அடிக்கப் பெற்று எழிலோடு விளங்கும். இரண்டாம் நாள் சிறப்பான நாள். தமிழரின் மரபுவழித் தொழில், உழவுத் தொழில், மழையின் அதிதேவதைகளான இந்திரன், கதிரவன் இவற்றை இயக்கும் கடவுள் ஆகியோருக்கு வழிபாடு நிகழ்த்தும் திருநாள்.

இத் திருநாளில் புதுப்பானையில் பாலும் தண்ணீரும் கலந்து செந்நெல் அரிசியோடு வெல்லக் கட்டியும் சேர்த்துப் பொங்கி நெய்கட்டிப் படைத்து உண்பது வழக்கம். பானையில் அரிசி இடுவதற்கு முன்பு பானையில் ஊற்றிய பாலும் தண்ணீரும் பொங்க வேண்டும். பானையில் பால் பொங்கும் போது “பொங்கலோ, பொங்கல்” முழக்கம்; இதயத்தில் மகிழ்ச்சி நிறைய முழங்குவர். இந்த இரண்டாம் நாள் விழாதான் பொங்கல் திருநாளின் மகிழ்ச்சி நிறைந்த நன்னாள். சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்; கடித்துத் தின்னக் கரும்பும் கிடைக்கும்.

மூன்றாம் நாள் விழா, மனிதனின் – விவசாயியின் செல்வமாகிய மாடுகளுக்கு! ‘மாடு’ என்றாலே செல்வம் தான்! தமிழ்ச் சமுதாயம் ஒரு காலத்தில் செல்வ ஆதாரத்தை, மாடுகளை வைத்தே கணக்கிட்டது. பசுமாடு, பால்பொழிந்து நமது உடலை, உயிரை வளர்க்கிறது. எருது, உழுது கொடுத்து விவாசயத் தொழிலின் முதுகெலும்பாக விளங்குகிறது– கால் நடைகள் விவசாயத்தைப் பாதுகாத்து வளர்க்கின்றன. கால்நடை வளர்ப்பும், விவசாயமும் இணைத் தொழில்கள்.

மாட்டுப் பொங்கல் நாளான இன்று, மாடுகளுக்குப் புத்தாடை கிடைக்கும். ஏன்? சோறுகூடக் கிடைக்கும். மாடு