பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விற்பது, வாக்குரிமையை யாருமே காசுக்கு விற்காதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இது ஒரு பெரிய தொண்டு, தேர்தலுக்குப் பல மாதங்கள் முன்பே சில கட்சிகள் கோடிக்கணக்கில் நிதி திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளின் எண்ணம் எப்படியும் காசு கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்பதுதான் போலும். வாக்குகளைப் பெறவும், வாக்குகளை வழங்கவும் நடைபெறும் தேர்தலில் பணத்திற்கு வேலையில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிருந்தும் வாக்குகளைப் பெற விரும்பித் தேர்தலில் குதிக்கும் கட்சிகளில் பல பண பலத்தையே இன்றியமையாத ஒன்றாகக் கருதிப் பணத்தைத் தேடிக் குவித்து வைத்துள்ளன. பணத்திற்கும் வாக்குக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எப்படியோ மக்களாட்சி முறைக்கு விரோதமாக இன்றைக்கு மேற்கண்ட நிறுவனங்கள் செயற்படுகின்றன என்பது “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு” என்ற கொள்கைக்கு எத்துணை மாறுபட்டது என்பதை வாக்காளர்களாகிய நாம் நன்றாகச் சிந்தனை அடிப்படையிலும், செயலின் அனுபவத்திலும் ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும்.

வாக்காளர்கள் சாதிமுறை வழிப்பட்டுத் தமது வாக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. வாக்குரிமை பெற்றிருக்கும் ஒருவன் தனது வாக்கைத் தான் விரும்புகிற ஒருவருக்குத் தான் விரும்பியபடி வழங்குகிற சூழ்நிலையை உருவாக்காத நிலையில், இன்றையச் சமுதாய அமைப்பின்படி சாதியின் பெயரால் - காசின் பெயரால் வாக்குகளைப் பெறத் தொடர்புடைய நிறுவனங்கள் முயற்சி செய்வதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது மக்களாட்சிக் கொள்கையுடைய அறிஞர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளில் பல சாதிமுறை அமைப்பை வெறுத்து ஒதுக்கும் கொள்கையுடையனவேயாம். ஆனாலும், தேர்தலில் உடனடியாக வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால்