பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடலுக்கு உறுதி சர்க்கரைப் பொங்கல்! உயிருக்கு உறுதி செந்தமிழ்! பொங்கல் வாழ்த்துக்கள்!

78. [1]பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ, பொங்கல்! தமிழகத்தின் தனி விழா பொங்கல் விழா; இனிய விழா; எளிய விழா; உழவர் விழா; இந்த விழா உழவர் வீடுகளில் மட்டும் மரபாகக் கொண்டாடப்படுகிறது! ஏன் ? கிராமப்புற வறுமை இன்னமும் நீங்கியபாடில்லை! களஞ்சியமாக இருந்த கிராமங்களில் இன்று நியாய விலைக் கடைகள்! உண்ணும் சோற்றுக்கு அரிசி வாங்கக் கிராமப்புற ஏழைகள் நெடிய வரிசையில் நிற்கிறார்கள்! அதிலும் கொடுமை கிராமத்தில் வாழ்கின்ற கொஞ்சம் வசதிபடைத்த சிலர் அந்த ரேஷன் கார்டுகளையும் அடகு பிடிக்கிறார்கள்! என்ன நடந்தால் என்ன? நடக்காது போனால் என்ன? பொங்கல் நிற்குமா? தீபாவளி நிற்குமா? அல்லது லாட்டரி சீட்டு வாங்காமல் இருக்க முடியுமா? நல்ல காலம் இன்று வராதா? நாளை வராதா? என்ற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடனேயே கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்று பொழுது விடியும்? பொழுதை விடியவைக்க வேண்டும். கதிரொளி துரத்தத் துரத்தத்தான் பொழுது விடிகிறது: கலியுகத்தை வீழ்த்த வேண்டும். கிரேதாயுகத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்குக் கிராமப்புற மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உழைப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும்! உழைப்பாளர் தம் உழைப்பச் சுரண்டும், உழைப்பாளர் பங்கைத் திருடும் சமுதாய அமைப்பை மாற்ற வேண்டும்.


  1. தினத்தந்தி 15.1.95