பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

39


தேர்தல் காலத்தில் அவர்கள் சாதியைத் துணிந்து பயன்படுத்தத் தவறவில்லை.

வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தெளிந்த சிந்தனையோடு சிந்திக்கவேண்டும். தேர்தலுக்கும் உணர்ச்சிக்கும் நெடுந்தொலைவு. எழுத்தால்-பேச்சால் எடுத்துக்காட்டுக்களால் வாக்காளர்களை உணர்ச்சி வசப்படுத்தி, அந்த உணர்ச்சியில் வாக்காளர்கள் மயங்கிக் கிடக்கும்போது, வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். தேர்தல் மேடைகளில் பேசுகிறவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் கேட்கின்ற வாக்காளர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. உணர்ச்சி வசப்படுத்தி வாக்குரிமையைப் பறிப்பது ஒரு வழிப்பறி போன்றதே. வாக்குரிமையைப் பயன் படுத்துவதில் தெளிந்த-அறிவின் வழிப்பட்ட சிந்தனைக்கு இடங்கொடுக்கவேண்டும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியே வாக்குரிமை உண்டு. மனைவியைப் பார்த்துக் கணவனோ கணவனைப் பார்த்து மனைவியோ வாக்குரிமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது நியதியில்லை. அப்படியிருக்க யார்யாரையோ காட்டி வாக்குகளைக் கேட்பார்கள். அவர்கள் காட்டக்கூடியதைக் காட்டினாலும் வாக்காளர்கள் காட்சி வசப்பட்டு வாக்குரிமைகளை வழங்கி ஏமாறக் கூடாது. காட்சிகளைக் காணும் இடம் தேர்தல் களமல்ல.

தேர்தல், சமுதாயத்தின் கருத்துவழிப்பட்ட புரட்சி இயக்கமேயாகும். எந்தக் கருத்து சமுதாயத்திற்கு நல்லது என்று கருதுகிறதோ அவ்வழியில் மக்களை வழிநடத்தி அமைத்துச் செல்வதே ஜனநாயக வழிப்பட்ட இயக்கங்களின் கடமை. அக்கருத்தை ஏற்றுக் கொள்வதென்பது மக்களுடைய பரிபூரண சுதந்திர உரிமை. நம்முடைய கருத்து சரியானது தானா? அதை, மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்றனரா? அக்கருத்துக்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு இருக்கிறது