பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உவந்து மகிழும் திருநாள் தைத்திங்கள் முதல் நாள். இந்த நன்னாளில் தங்களுக்கு இந்த இனிய வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். வறுமையில் வரும் விழா அல்ல – வளத்தில் வரும் விழா. காசைக் கரியாக்கும் விழா அல்ல – கரும்பாக்கும் விழா. எரிக்கும் விழா அல்ல – எண்ணரிய புதுமைக் கோலமூட்டும் விழா. வயிற்றுவலித் திருவிழா அல்ல – பொங்கல் திருவிழா, சாறு வடித்த சோற்று விழா அல்ல – சாற்றோடு கலந்த சத்துணவு விழா! பொங்கலோ பொங்கல்!

தமிழர், நீண்ட நெடிய நாட்களுக்கு முன்பே, பண்பாட்டமைப்புடைய வாழ்க்கைக்குக் கால்கோள் செய்தனர் – வாழ்க்கைக்குச் சோறும் தண்ணீரும் இன்றியமையாதன. அவை மட்டுமே போதுமா? போதா? மகிழ்ச்சி என்ற சோறும் தேவை! விழா எடுத்தல் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது பழந்தமிழர் கொள்கை. எனவே, மக்கள் கூடிக் கலந்து பழகி இனிது வாழ வாய்ப்புக்கள் பெருகும் என்று கருதித் திருவிழா எடுக்கும் கொள்கையைத் தோற்றுவித்தனர். தமிழினத்தின் குடும்பத் திருவிழாவாக – சமுதாயத் திருவிழாவாக – தமிழகத்தின் தனிப்பெரும் விழாவாகக் காட்சி தருவது பொங்கல் விழா. இஃதன்றிச் சமய விழாக்களாகத் திருக் கோயில் திருவிழாக்களும் நடைபெறும்.

தமிழின நாகரிகத்தில் மார்கழித் திங்கள் நிறைமதி நன்னாளில் (பருவம்) புதிய ஆண்டு தொடங்குகிறது என்ற ஒரு கருத்துண்டு. மார்கழி நிறைமதி நாள் தொடங்கித் தைத்திங்கள் நிறைமதி நாளில் நிறைவுறும் மார்கழி நீராடல் – தை நீராடல் என்றழைக்கப் பெறும். இன்றையப் பாவை நோன்பு நிகழும். குடும்பத் தோற்றத்திற்குக் காரணமாக அமைய வேண்டிய கன்னிப் பெண்கள் தமக்கு வாய்க்கும் கொழுநன் இனிய வகையில் – ஏற்றவனாக அமைதல்