பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

536

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால் இன்று பயன்படாத பழைய கொள்கைகள் இருக்குமாயின் அவற்றை விட்டொழிப்பதும் அவசியமாகும். அதற்குப் பெருந்துணிவு வேண்டும். அந்தத் துணிவை - வலிமையைப் பொங்கற் புதுநாளில் நாம் பெற வேண்டும். அதுபோலவே, வளர்ந்துவரும் - பயன்தரும் புதிய கருத்துக்களைக் கூச்சமின்றி ஏற்றுக் கொள்ளும் மனப்பண்பும் வேண்டும்.

ஞாயிறு, காலத்தை அளக்கும் கருவி; அதுமட்டுமல்ல - உயிரினத்தின் தோற்றம் - வளர்ச்சி - வாழ்க்கை அனைத் திற்குமே ஞாயிற்றின் ஒளி இன்றியமையாத ஒன்று. ஞாயிற் றொளியின் துணை கொண்டே பொருள்கள் விளைகின்றன. ஆதலால், ஞாயிறு போற்றுதல் பழந்தமிழ் மரபு. அதனாலன்றோ இளங்கோவடிகள், தமது காப்பியத்தின் தொடக்கத்தில்.

‘ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்’

என்று பாடுகின்றார். பொங்கற் புதுநாள் ஞாயிறு! போற்றும் நிகழ்ச்சியோடு தொடங்குகிறது!

தமிழர் வாழ்க்கை இயற்கையோடியைந்தது. தமிழின நாகரிகத்தில், அது காதல் வாழ்க்கையாயினும் சரி, கடவுள் வாழ்க்கையாயினும் சரி ஏறு முதன்மையிடம் பெறுகிறது. பழங்காலத் தமிழ் இளைஞர்கள் காதல் வாழ்க்கையில் ஏறு தழுவிக் கன்னியரைக் கைப்பிடித்தும். புறத்திணை வாழ்க்கையில் நிரை கவர்தல் மூலம் நிலங்கொண்டும் வாழ்ந்தனர். தமிழகத்தின் தனிநெறியாகிய சிவநெறியிலும் எருதுக்குத் தனிச் சிறப்புண்டு. சிவபெருமான் விருப்பத்தோடு ஊர்ந்து வரும் ஊர்தி எருதேயாகும். அப்பரடிகள்.

“ஆன்அலாது ஊர்தியில்லை
ஐயன் ஐயாறனார்க்கே”