பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

537


என்று கூறகின்றார். பிற்காலப் பிற வாகனங்களை அப்பரடிகள் உடன்படவில்லை என்று தெரிகிறது. சிவபெருமான் ஊர்ந்து வரும் ஒரேயொரு ஊர்தி எருதேயாகும்.

சிவபெருமான் உயர்த்திப் பிடிக்கும் கொடியும் இக்கொடியேயாகும். ‘ஏறு கொண்ட கொடி எம்மிறை’ என்று திருமுறை பேசுகின்றது. சிவபெருமான் ‘வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை’ ஆட்கொள்வதற்காகக் கொலு வீற்றிருக்கும் திருக்கோயில்களின் நுழை வாயில்களில் நாம் முதலில் காண்பது எருதேயாம். எருதைப் பார்த்த பிறகே இறைவன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்! அழகிய சித்தாந்தம்! இறைப்பண்பு இதயத்தோடு இணைந்துப் பேசப் பெறுவது மிகத் தொன்மையான மரபு. இறைவன் எருதில் ஊர்ந்து வருகிறான் என்றால், உலகியலில் வேறு பொருள் கொண்டாலும் அருளியலில் கொள்ளத்தக்க சிறந்த பொருள் ஒன்றுண்டு. மலரை இடமாகக் கொண்டு மணம் வெளிப்படுதல் போல, தண்ணீரை இடமாகக் கொண்டு தண்மை வெளிப்படுதல் போல, உயிரை இடமாகக் கொண்டு இறைத்தன்மை வெளிப்படுகின்றது. சிவன் எம்பிரான் எருதை ஊர்தியாகக் கொண்டு உலா வருகிறான் என்றால் எருதின் மிகச் சிறந்த பண்பாகிய அற வாழ்க்கையினை மேற்கொண்ட உயிர்களை இடமாகக் கொண்டு விளங்குகின்றான் என்பதே பொருள். அறவாழ்க்கையாவது. ஆற்றலுக் கேற்றவாறு உழைத்தல். உழைப்பின் பயனால் வாழ்க்கை அனுபவத்திற்குரிய பொருள்களைத் தோற்றுவித்தல் - படைத்த பொருள்களைப் பலருக்கும் கொடுத்து மகிழச் செய்து பிறர் மகிழ்ச்சியில் தம் மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியனவே. இவ்வியல்புகள் மற்றெல்லா உயிரினங்களையும்விட எருதினிடத்திலேயே அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். பசு கூட நிறையப் பால் கொடுக்கும். ஆனால், பால் தர அது. உழைக்க வேண்டிய அவசியமில்லை. எருது ஒன்றே உழைப்பின் வழிப் பலன் தருகிறது.