பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

538

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘உழுத நோன்பகடு
அழிதீன் றாங்கு’

என்பது புறநானுற்றுப் பாட்டு. உழுத மாடு தன்னுடைய உழைப்பினாலாகிய செந்நெல் அரிசியை மனித உலகிற்குத் தந்துவிட்டு, மனிதர்களுக்குத் தேவையில்லாத வைக்கோலைத் தின்று, மீண்டும் மனித குலத்திற்கு உழைத்துத் தரவேண்டும் என்ற நன்னோக்கத்துடன் உழைக்கிறது - வாழ்கிறது. இந்தப் பண்பாட்டையே அறநெறி என்று இலக்கியம் காட்டுகின்றது. சமுதாய வாழ்விலும் சமய வாழ்விலும் ஏறு நடைபோடும் - புகழ் பெற்று விளங்கும் எருதினைப் போற்றும் விழா, பொங்கல் விழாவில் குறிப்பிடத்தக்கதாகும்.

பொங்கல் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சமுதாய விளையாட்டு விழா நடக்கிறது. இளைஞர்களும் பெரியவர்களும் தத்தம் இயல்புக்கேற்றவாறு விளையாடி மகிழ்கின்றார்கள். இத்தகு எழுச்சியும் ஏற்றமும் மிக்க பொங்கல் திருநாளை - தமிழர் திருநாளை இன்ப அன்பு பொங்க நாம் கொண்டாட வேண்டும்.

பொங்குக பொங்கல்! பொங்கல் விழாவில் நாம் நினைத்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் பலப்பல உண்டு. முதலாவது, புதிய பானையில் புதிய அரிசியிட்டுப் பொங்கல் பொங்குகிறோம். புதிய பானையும் புத்தரிசியும் புதிய சிந்தனைப் பார்வையைத் தருகின்றன. சோறாக எங்கும் விளைந்து விடவில்லை. நெல்லாகவே விளைகிறது. நெல்லாக விளைவதைச் சோறாக ஆக்குவதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பலப்பல. முதலாவதாக நெல், தண்ணீர் கலந்த ஈர நிலையிலேயே விளைகிறது. அறுவடை சென்றதும் முதற் கடமையாக நெல்லைக் காய வைத்து ஈரத்திலிருந்து பிரிக்கின்றோம். பின்னர் அதைப் புழுங்கல் அரிசியாக்கத் தண்ணீரில் நனைத்து ஊறவைத்து அவித்துப்