பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

541


துன்ப நீரை இறைத்து வெளியேற்றும் ஒருருளையிற் பூட்டிய வாளிகள் அன்பும் தொண்டுமேயாகும்.

பகை கொள்ளுதற்குப் பகுத்தறிவு தேவையில்லை. ஆண்மையும், ஆள்வினையும்கூடத் தேவையில்லை. ஆதலால், அன்பு மலர முயற்சிப்போம்! குற்றங்களை மறந்து குணங்களைப் படைக்க முயற்சிப்போம்! திருவருட் சிந்தனையோடு இந்த உலகில் புதுமை படைப்போம்! பொதுமையும் காண்போம். இந்த அரிய முயற்சியை ஒருவராகச் செய்ய முடியாது. பலர் கூடிச் செய்தல் வேண்டும். ஆதலால், இறவாத இன்ப அன்பு மலர நாம் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சிப்போமாக! நன்மை பெருக - அருள்நெறி நாளும் வளர வழி காண்போமாக! சென்ற காலத்தில் தாங்கள் காட்டிய பழுதிலா அன்பிற்கு நமது நன்றி! எதிர்காலச் சிறப்பிற்குத் துணை நிற்கக்கூடிய தங்களுடைய இனிய அன்பிற்கு - ஒத்துழைப்பிற்கு வாழ்த்துக்களுடன் கூடிய நமது வரவேற்பு!

82. [1]எருதுபோல் உழைப்போம்

ஞாயிறு திரிதரு உலகம் என்பது வழக்கு. இந்த உலகத்தினை ஞாயிறு வலம் வருவதை ஆண்டாக, நாள்களாகக் கணக்கிடுகின்றோம். ஞாயிறு வலம் வருவதை 'திரிதரு' என்று கூறியது உலக வழக்கம். இன்றைய உலக வழக்கில் திரிதருதல் என்றால் பயனற்று இங்கும் அங்குமாகச் சுற்றுதலைக் குறிக்கும். ஆனால் ஞாயிறு நாள்தோறும் வலம் வருதலில் அளவிடற்கரிய பயன்கள்! உலகம் ஒளிமயமாகிறது; தூய்மையாகிறது, தாவரங்கள் வளர்கின்றன; உயிர்க்குலம் தழைத்து வாழ்கிறது; இருள் அகலுகிறது. "இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறே போன்று" என்று மாணிக்கவாசகர் பாடினார்.


  1. தினகரன் பொங்கல் மலர் 1995