பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

551


இந்தியா, தமிழ் நாடு ஆகிய அனைத்துக்கும் நெருக்கடிகள் நிறைந்துள்ள நேரம்: இன்றைய மனிதகுல வாழ்க்கைப் போராட்டத்தில் யுகப்புரட்சி செய்த சோவியத்திலேயே நெருக்கடி! தத்துவங்களுக்குச் சோதனை! இந்தியா - தமிழ்நாடு, சமயச் சார்பற்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த அரைநூற்றாண்டாக அமைந்த ஜனநாயக சோஷலிசம் என்ற தடத்திலிருந்து மாறுகிறது. பிற்போக்குச் சக்திகளின் வளர்ச்சி கூடியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மதுரையில் கூடியுள்ளோம்! சிந்தித்து நல்ல முடிவுகளை எடுத்துச் செய்ய வேண்டு வனவற்றைச் செய்ய மாநாடு வழிகாட்டும் என நம்புகின்றோம்.

தமிழ், வளர்ந்த ஒரு மொழி. ஆயினும் காலந்தோறும் வளர்ச்சி பெற வேண்டிய மொழி. தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உண்டு! அவையெல்லாவற்றையும் விடச் சிறந்து விளங்குவது திருக்குறள் திருக்குறள் ஓர் இலக்கியம் மட்டுமன்று. திருக்குறள் சமுதாயமாற்றத்திற்குரிய கருவிநூல். பிரெஞ்சுப் புரட்சிக்குக் கருவியாக அமைந்த ரூசோவின் “சமுதாய ஒப்பந்தம்”, சோவியத் புரட்சிக்கும் கருவியாக அமைந்த “மூலதனம்” ஆகிய நூல்களைப்போல, சமுதாய மாற்றத்திற்குத் துணை செய்யக்கூடிய கருவிநூல் திருக்குறள். ஆனால் தமிழ்நாட்டில் சமுதாய மாற்றம் ஏற்படவில்லை. ஏன்? புவியை நடத்தவும், பொதுவில் நடத்தவும் தமிழர்கள் விரும்புவதில்லை.

திருக்குறள் அறம் பேசுகிறது; பொருள் காட்டுகிறது; இன்பம் தருகிறது. திருக்குறள் முப்பால். மானுடத்தின் முழுமைக்கு மூன்றும் தேவை. அதனால், திருக்குறள் முப்பாலாகத் தோன்றியது.

திருக்குறள் தனி மனிதனை வளர்க்கிறது; குடும்பத்தினை அமைத்துக் காட்டுகிறது; சமுதாய அமைப்பு உருக்கொள்ளத் துணை செய்கிறது. திருக்குறள் சமுதாயத்தின்