பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

552

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துறைதோறும் அறிவூட்டுகிறது; சமுதாய வளர்ச்சிக்கு வித்தாக அமைந்து விளங்குகிறது. எனவே திருக்குறள் சமுதாய மாற்றத்திற்குரிய கருவி நூல்.

திருக்குறள் வாழ்வாங்கு வாழ்தலையே அறம் என்று பேசுகிறது. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் அறம்” என்பது திருக்குறள், அறச் செய்ய விரும்புதல்; அறம் செய்தல் - இவையெல்லாம் காலத்திற்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழும் வழியில் அமையின் அறம், அஃதில்லையாயின் ஆரவாரம்.

திருக்குறள், பொருள் இன்றியமையாதது என்று பேசுகிறது. “செய்க பொருளை!” என்று அறிவுறுத்துகிறது. பொருள் செய்தலுக்கு, பொருள் இயற்றலுக்கு அறிவறிந்த ஆள்வினை வழிகாட்டுகிறது. ஊழ்வினை உருத்துவரும் பழக்கங்கள் - வழக்கங்கள் தொடர்தல் இயற்கை! வாழ் பெரு வலிமை உடையதுதான்! ஆயினும் முயற்சியின் முன் ஊழின் வலிமை நிற்காது. தளராத முயற்சி, நாளும் வளரும் முயற்சி ஊழை வெற்றிகொள்ளும். இதுவே வாழ்வியல். ஆதலால் ஊழின்பாற் பழியைப் போட்டுவிட்டு வாளா உறங்குதல் கூடாது. ஊழையும் உப்பக்கம் கானும் ஆள்வினையை ஏற்போம்.

திருக்குறள் ஒருமை நலம் உணர்த்தும் நூல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுவே திருக்குறுளின் சமுதாய அறம்! திருக்குறள் வழி அமையும் சமுதாய அமைப்பில் சாதிகள் இல்லை! மதங்கள் இல்லை! எந்த வேற்றுமையும் இல்லை! ஒரு குலமே!

தனி மனிதன் - குடும்ப அமைப்பு சொத்துடைமைக்கு அடிப்படை சொத்துடைமைச் சமுதாயமே அரசியலுக்குக் களம்! திருக்குறள் அரசியல் நூல்! திருக்குறள் நெறி, சமுதாய நீதி சார்ந்த அரசியல் நெறி, சமுதாய நீதி சார்ந்த அரசியல் நெறி! தனி மனிதச் சொத்துடைமை தோன்றியதன் விளைவாக அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்