பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

556

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இன்று வாழலாம்; நாளை வாழலாம்; இன்று செய்யலாம்; நாளை செய்யலாம் என்ற மனப்போக்குக் கூடாது. நல்ல வண்ணம் வாழ நினைப்பவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. அதுமட்டுமல்ல. சென்ற காலம் சென்ற காலமேதான். இனி, திரும்பி வரக்கூடியது அல்ல. எதிர்காலம் இனிமேல் வரக்கூடிய ஒன்று. அது வருமா? வாராதா? என்பது ஐயப்பாட்டிற்குரியது. ஆதலால், எதிர் காலத்தைச் சான்றோர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இன்று வாழ்வதே உண்மை. ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் மரணம் நிழல்போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மரணம் என்பது தவிர்க்கமுடியாத இயற்கை நியதி. ஆதலால் "இன்று நன்று, நாளை நன்று என்று காலத்தைக் கடத்துதல் கூடாது. கழிக்கப்படுகின்ற ஒவ்வொரு விநாடியும், வாழ்நாளின் ஒரு பகுதி என்பதை உயத்துணர வேண்டும். மரணம் என்று வரும்? எப்பொழுது வரும்? எப்படி வரும்? இந்த உண்மை யாருக்கும் தெரியாது. "யாரறிவார் சாநாளும் வாழ்நாளும்? என்று திருமுறை கேட்கும்.

ஆதலால், நம்முடைய வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியையும் பொருளுடையதாக்க வேண்டும்; பயனுடையதாக்க வேண்டும். முதலில், வாழ்நாள் பயனுடையதாவதற்குத் தடையாயிருக்கிற தீமையிலிருந்து முற்றாக விடுதலை பெற வேண்டும் நம்முடைய மனத்திற்கு இயல்பாக நன்றும் தீதும் பகுத்தறியும் திறனில்லை. அது ஆசை, கவர்ச்சி ஆகியவற்றுக்கு இரையாகிக் கண்டபடி சுற்றும். வாழ்க்கைக்குரிய நன்மையை, தீமையைப் பகுத்தறியும் ஆற்றல் புத்திக்கே உண்டு. மனதை, புத்தியின் ஆளுகைக்குக் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் நன்மை தீமைகளைப் பகுத்தராய்ந்து, தீமைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். இந்த விடுதலை இயல்பாகக் கிடைக்காத ஒன்று. கடுமையான போராட்டம் தேவை. பொல்லாத மனம் தீமையை நன்மை போலக் காட்டும்.