பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

557


துன்பத்தை இன்பம் போலக் காட்டும். இதற்கிடையில் பழக்கவாசனை வேறு. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் வாழும் சமுதாயச் சூழலின் நெருக்கடி வேறு. இவ்வளவுக்கும் இரையாகி “மீன் வற்றல் விற்ற பெண்” போல், தீமையையே நன்மையென்று கருதி வாழ்தல் மனிதகுலத்தின் இயல்பாகி விட்டது. இந்த இடத்தில்தான் பகுத்தறிவின் தெளிவும், தெளிவைக் கடைப்பிடிக்கும் துணிவும் தேவைப்படுகின்றன. தீமையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, ஆன்மா சூன்யத்தில் இருக்க முடியாது. தீமையிலிருந்து விடுதலை பெறவும், தீமையிலிருந்து பெற்ற விடுதலையை நிலையாகப் பராமரிக்கவும் ஆன்மாவிற்கு நன்மையின் பற்றுக்கோடு தேவை.

ஆதலால், உயிர்க்கு உடனடியாக அறநெறிச் சார்பு தேவை. அறநெறியிலும் சாதாரண - நெடிய - பயன்தர இயலாத அறங்கள் உண்டு. இவைகளைச் செய்தால் மட்டும் போதும். ஆனால், நிலையில்லாத உலகத்தில் நிலையாக வாழ ஆசைப்படுபவர்கள் - இறந்த பின்னும் வாழ ஆசைப்படுபவர்கள் மிகப் பெரிய பேரறங்களை மேற்கொள்ள வேண்டும். நெடிய உலக வரலாற்றில் புகழ் பெற்ற மாந்தர் சிலர் உண்டு. அவர்கள் சிறந்த பேரறங்களைக் கண்டு உணர்த்தியுள்ளனர். அந்த அறங்களுக்காகவே அவர்கள் தம் வாழ்நாளில் இன்னல்கள் பலவற்றை ஏற்றுத் துன்பப்பட்டுள்ளனர். இறந்தும் இறவாமை பெற்றனர். இத்தகு புகழ்மிக்கோர் வரலாற்று ஏட்டில், அப்பரடிகள், புத்தர், ஏசு, நபிகள் நாயகம், அண்ணல் காந்தியடிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் காட்டிய அந்தப் பேரறம் என்ன? தீமை தோன்ற வாய்ப்பளிக்காத வாழ்க்கை முறையே, தீமையற்ற வாழ்க்கை முறை. அதாவது, நல்லற வாழ்க்கை தீமை, பிரிவினையில் தோன்றும். நன்மை ஒருமைப்பாட்டில் தோன்றும். தீமை, தன்னயப்பில் தோன்றும், நல்லறம், பிறர் நலத்தில் தோன்றும். தீமை, பகைமையில் தோன்றும். நன்மை, இணக்கத்தில்