பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

561


86. திருப்பத்தூர்த் தமிழ்ச் சங்கத் தொடக்கவிழா உரை
(18-5-1967)


அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய தமிழ்ப்புலவர் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளிய” திருத்தளிநாதனின் திருவடிகளை நினைந்து நம்முடைய வாழ்த்துடன் கூடிய வரவேற்பு:–

முன்னுரை: தமிழ் காலத்தால் மூத்தமொழி. கருத்தாலும் வளர்ந்தமொழி. முத்திறத்தாலும் வளர்ந்த முத்தமிழ். அதாவது திருவருளாலும், அரசர்களாலும், பொதுமக்களாலும் பேணி வளர்க்கப்பட்ட பெருமொழி பல கடற்கோள்களாலும், மாறுபட்ட அரசர்களாலும் அழிக்கப் பெறாமல் நின்று நிலவும் நிலையான மொழி. தமிழ் இனிமை நிரம்பிய மொழி. எளிமை நிறைந்த மொழி. சொற்சுவை நிறைந்த மொழி, பொருட்சுவை நிறைந்த மொழி. பொருள் வழி வரவேண்டிய பயனும் தரும் மொழி.

தமிழின் சிறப்பு: தமிழ் இனிய எளிய மொழி. ஆயினும் இலக்கண வரம்பு நிறைந்த மொழி. தமிழைப்போல இலக்கண வரம்புடைய பிற மொழி இந்த நாட்டில் இல்லை. “மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணப்படுமோ” என்று பேசுகிறது திருவிளையாடற் புராணம். இன்று, தமிழில் தொன்மையானதாகவும் முதல் நூலாகவும் விளங்குவது தொல்காப்பியம். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல், ஒருவகையில் இலக்கிய நூலும்கூட. அதாவது வாழ்க்கையின் இலக்கைக் காட்டி அவ்வழியில் மனித இனத்தை ஆற்றுப்படுத்தி, அந்நெறியில் வாழ்விக்கச் செய்வதுதானே இலக்கியம்? தொல்காப்பியப் பொருள்