பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதிகாரத்தில் வாழ்வியல் பேசப்படுகிறது. அதனால் தொல்காப்பியம் இலக்கியமும் ஆகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகட்குப் பிந்தியது என்று சொல்வார் யாரும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகட்கு முந்தியது என்ற கருத்துடையவரும் உளர், மொழியும் மொழிவழிக் கருத்துக்களும் திடீரெனத் தோன்றிவிடுபவை அல்ல. அம்மொழியைப் பேசுகிற மக்களின் காலத்தோடு இயைந்த அநுபவத்தின் விளைவாகவே கருத்துக்கள் தோன்றும்; மாறும்; வளரும்; இது இயற்கை தமிழ் உலகத்தில், பழைமை - புதுமைச் சண்டை நேற்றுக் கிடையாது. நேற்றைக்கு முன்தினம் கிடையாது. அதாவது முற்காலத்தில் கிடையாது. ஆனால், இன்று பழமை - புதுமைச் சண்டைகள் தோன்றி உள்ளன. முன்பு இல்லாததற்குக் காரணம், நம்முடைய முன்னைய தமிழ் இனம் சிந்தனை ஆற்றல் உடையதாக இருந்ததாகும். அவர்கள் புதுமை காண்பதில் பேரார்வம் காட்டினர்:- பழமைக்குப் புதுமைப் புத்துணர்வு கொடுப்பதிலும் கருத்துச் செலுத்தினர். மனித உலகுக்குத் தேவையான ஒன்று புத்துணர்வுடனும் புதுமைப் பொலிவுடனும் என்றும் விளங்கும். தேவை இல்லாத பழையது சருகெனத் தாமே அழியும். புதியன, தாமே புகும். இது தமிழ் மரபு. "பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல காலவகையினானே" என்பது தமிழ் இலக்கணம். அருளாசிரியராகிய மாணிக்கவாசகரும் இறைவன் முன்னைப் பழமைக்குப் பழமையாய். பின்னைப் புதுமைக்குப் பெயர்த்தும் அப்பெற்றியாய் உளன் எனப் பாடிப்பரவுவது பழமை உலகத்திற்கும் எதிர்வரும் புத்துலகத்திற்கும் இணைப்பூட்டுவதாக உள்ளது. தமிழ் மரபு வழி வளந்த மொழி. நலம் தரும் பழயன போற்றும் மொழி. புதுமை ஏற்கும் மொழி. இலக்கணக் கட்டமைந்த மொழி இத்தகு சிறப்புக்கள் இருந்தமையால் அன்றோ அள்ளக் குறையாத அனுபவத்திற்குத் தெவிட்டாத இலக்கியம் பலவற்றைத் தமிழ் உலகம் காணமுடிந்தது?