பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யின்படி நாடு, எல்லை, மொழி, இனம் ஆகிய வேற்றுமைகளையெல்லாம் கடந்து, “மனித குலம்” என்ற அடிப்படையில், ஓர் ஒருமைப்பாட்டைக் காண்கின்றோம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் காவியம் செய்தருளிய சேக்கிழார் பெருமானும், “உலகம்” என்றே பல இடங்களில் முதன்மைப்படுத்தி வற்புறுத்தியுள்ளார். ஏன்? திருமூலர் “ஒன்றே குலம்” என்று தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகின்றாரே. ஆனாலும், அயல் வழக்கு நுழைவின் காரணமாகவும் வேண்டாத ஆதிக்கத் தத்துவங்களின் ஆட்சியின் காரணமாகவும் நம்மிடையே எண்ணத் தொலையாத-பொல்லாத சாதி வேற்றுமைகள்- பிரிவினையுணர்ச்சிகள் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நுழைந்தன. இத் தீவினைகளை சில சமயச் சான்றோர்களும் அறிஞர்களும் தொடர்ந்து வன்மையாகச் சாடி வந்தும் கூட இப்பிரிவினை உணர்வுகளினின்றும் நாம் விடுதலை பெற்றோம் இல்லை. இதன் காரணமாகவே இந்த நாடு பலகோணங்களில் அடிமைப்பட்டது என்பதை நாம் மறந்து விடுவதற்குமில்லை. அதுமட்டுமா? தவறான கொள்கைகளின் காரணமாகவும் அயல் ஆட்சிகளின் காரணமாகவும் நமதுநாட்டு மக்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவில்லாதவர்களாக ஆனார்கள். இல்லாமை, அறியாமை, பிரிவினையுணர்வு. அந்நிய ஏகாதிபத்தியம், அந்த ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணம் பார்க்கும் வேலை இவற்றின் காரணமாக நம்முடைய நாட்டில் மலையும் மடுவும் அனைய பொருளாதார ஏற்றதாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் வாழ்வதும் பலர் வாடுவதுமாக இருக்கின்ற சமுதாய அமைப்பைக் காண்கின்றோம். மேற்காட்டிய குறைபாடுகளை மாற்றி நிறைவு பெறச் செய்யும் முயற்சிக்கே சமுதாய நலம்பேணும் வாக்காளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ?

இன்றைய நீதி சமகுல சமுதாயம் காண்டதுதான். நாம் மொழிவழி தமிழர்கள். நாட்டுவழி இந்தியர்கள்; கூடிவாழ