பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

565


பேசப்பெறுகின்றன. ஆலமர் செல்வன் கலித்தொகையில் காட்சி அளிக்கின்றான். சிந்தைக்கினிய செவிக்கினிய சிலம்பில் பிறவா யாக்கைப் பெரியோனாகச் சிவபெருமான் காட்சி அளிக்கின்றான். ஆதலால் பழந்தமிழர் வாழ்க்கை சமயச்சார்புடைய வாழ்க்கையேயாம். சமயச்சார்பிலும் தொன்மைக்காலத்தில் சிவநெறியின் சார்பே மிகுந்து விளங்கி இருக்கிறது. ஒரோ வழி வைணவ நெறியும் இடம் பெற்று இருந்திருக்கிறது. மற்றைய பெளத்தம், சமணம் முதலிய சமயங்கள் தமிழ் இனத்தில் செல்வாக்கால் கால் கொள்ளவில்லை. ஆயினும் தமிழ் இலக்கிய உலகத்தில் அச்சமயங்கள் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றிருக்கின்றன. மொழி மனித குலத்தை ஈர்க்கும் ஒரு துறை என்பதை உணர்ந்த சமண பெளத்த சமயங்களைச் சார்ந்த முனிவர்களும், பின்னால் சிறித்துவமத முனிவர்களும் தமிழ் மொழி வளர்ச்சியிலும் புது இலக்கியங்களைத் தம்முடைய கருத்துச் சார்புடையனவாக ஆக்குவதிலும் முனைந்தனர். அதில் மிகச்சிறந்த வெற்றியும் பெற்றனர். இலக்கிய இன்ப நலம் செறிந்த ஒரு காவியமாக சீவக சிந்தாமணி விளங்குகிறது என்பதை யார்தாம் மறுக்க முடியும்? எனினும் அந்தச் சமயக் கருத்துக்கள் வழியில் அச்சமயங்களும், பின்வந்த சமயங்களும் கூடத் தம் சமய வழியில் மக்களை ஈர்க்க இயலவில்லை. தமிழினத்தின் திருக்கோயில்களும் தமிழ் இனத்தைத் தாயினும் சிறந்த தயையுடன் பரிந்து பாதுகாக்கும் பொறுப்புள்ள திருமடங்களும் செய்யத்தவறியும் தமிழ் மக்கள் இன்னமும் வழிவழிச் சமயச் சார்பிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். ஈடுபாடு கொண்டுள்ளனர். இறைவன் திருவருளாலும் தமிழ் இனத்தின் உணர்வுப் பிடியினாலுமே இன்று சைவம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

சைவத் தமிழின் பொற்காலம்

தமிழக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு ஒரு பொற்காலம். ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய பொற்காலம் 12-ஆம் நூற்றாண்டு வரையில் சீராக வளர்ந்து வந்திருக்கிறது.

கு.XIII..37