பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

566

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்த இடைப்பட்ட காலத்தில் தோன்றியவைகளே தமிழ்த் திருமுறைகள், அறம், பொருள், இன்பத்திற்கு மறையென விளங்கும் திருக்குறளைப் பெற்ற தமிழ் இனம், வாழ்க்கையின் முடிவான இன்பத்தைப்பெற இத்திருமுறைகளையும் மறைகளாகப் பெற்று விளங்கிற்று. உலகில் ஒரு ஞாயிறே உலவுகிறது. ஆனால் 7ஆம் நூற்றாண்டில் தமிழக வானில் இரண்டு ஞாயிறுகள் உலாப்போந்தன. ஒன்று ஞானம்; பிறதொன்று ஞானத்தின் பயனாகிய தொண்டு. முதல் ஞாயிறு திருஞானசம்பந்தர்; இரண்டாம் ஞாயிறு தமிழகத் தலைவராகிய அப்பரடிகள். இந்த இரண்டு பெருமக்களும் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் தமிழ் நெறிக்கும் சிவநெறிக்கும் செய்த தொண்டுகளை எண்ணிப்பார்த்தால் உருக்கம் மேலிடும்; உணர்வு தோன்றிடும். அப்பரடிகள் ஒரு தீவிர சிந்தனையாளர். நெஞ்சத்தால் இறைவனோடு தொடர்புடையவர். மாசிலாத் துறவி. பேராண்மையாளர். அவருடைய பாடல்கள் தமிழின்ப ஊற்றுச் சுவை உடையன. மொழிக்கு மொழி தித்திப்பாக விளங்கி முத்திக்கு வித்திடுவன. இங்கிலாந்து தேச சரித்திரத்தில் 17ஆம் நூற்றாண்டு தொடக்க முதல் தான் முடியாட்சி எதிர்ப்புத் தோன்றி வளர்ந்திருக்கிறது. ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று கொடி கட்டி ஆண்ட பல்லவ மன்னனை எதிர்த்துள்ளார். மற்றும் வடபுல வாடைக் காற்றின் வழியாக நுழைந்து தமிழர் வாழ்க்கையில் - சமயத்தில் ஆட்சி செய்த மூடக் கருத்துக்களை பழக்க வழக்கங்களைக் கடுமையாகக் கண்டித்து திருத்தம் காண முயற்சி செய்த பெருமை அப்பரடிகட்கே உண்டு; தமிழர்களில் சிலர் இனத்தால் தமிழராக வாழ்ந்தாலும் தமிழில் பேரார்வம் காட்டினாலும் சமய நெறிக்கு அவர்கள் உடன்படுவதில்லை. அவர்கள், வால்டேர் இங்கர்சால் போன்றவர்கள். கண்ட கடவுள் மறுப்பு நெறியினை மேற்கொண்டுள்ளனர் அவர்கள்