பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புக் குழுவின் செய்தி

1989 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அதன் பொன்விழாவைக் கொண்டாடியது. அவ் விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பன்னிருவருக்குக் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கியது. பட்டம் பெற்றவர்களுள் வணக்கத்துக்குரிய குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் ஒருவர். பட்டமளிப்பு விழாவில் அடிகள் பிரான் கலந்துகொண்ட பின் ஓய்வுக்காகச் சிதம்பரத்தில் உள்ள பயணிகள் மாளிகையில் தங்கியிருந்தார்கள். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரும் அடிகள் பிரான்பால் பேரன்புடையவருமான டாக்டர் ச. மெய்யப்பன் அவர்கள் அடிகள் பிரானைக் கண்டுகொண்டார். அப்போது “அடிகளார் எழுதி வெளிவந்துள்ள எல்லாப் புத்தகங்களையும் பொருள் வாரியாகப் பிரித்துத் தொகுத்துத் தந்தால் மணிவாசகர் நூலகம் மூலம் வெளியிடலாம் என்று விரும்புகிறேன்” என்று அடிகள் பிரானிடம் தெரிவித்தார். அப்போது அடிகள் பிரான் ஆவன செய்வோம் என்றார்கள். சில திங்கள் கழிந்தபின் தொகுப்புப் பணி தொடங்காத நிலையையறிந்த டாக்டர் ச. மெய்யப்பனார் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் மூலமாகத் தொகுப்புப் பணியைச் செய்யத் தூண்டினார்கள். ஆயினும் அடிகள் பிரான் காலத்தில் இப்பணி தொடங்கி நிறைவேறத் திருவருள் கூட்டிவைக்கவில்லை.

1995 ஏப்ரல் 15இல் அடிகள் பிரான் பரிபூரணம் எய்தினார்கள். அதன்பின் 1999 இல் ஒரு நாள் குன்றக்குடி வந்த டாக்டர் ச. மெய்யப்பன் அவர்கள் இப்போதைய குருமகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களைக் கண்டுகொண்டு இந்நூல் தொகுப்புப் பணி பற்றிக் கூறினார்கள். குருமகாசந்நிதானமும் இசைவளித்தார்கள். டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களின் ஆலோசனையையும் பெற்று பதிப்பாசிரியர் குழு அமைக்கப்பெற்றது.