பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாக்குகளை வழங்க வேண்டும். நம்முடைய ஜனநாயக ஆட்சியின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்று எதிர்க்கட்சி. நம்முடைய கருத்துக்கு இயைய ஆட்சி நடத்துகிறவர்களுக்கே நமது வாக்குரிமைகளைப் பெற முழுவதும் தகுதியுண்டு. எனினும் நம்முடைய கருத்தை மேலும் முழுமைப்படுத்திச் செழுமைப் படுத்தவும், மாறுபட்ட கருத்தை விவாத ரீதியில் விவாதித்து ஒதுக்கவும், மாறுபட்ட கருத்துடையவர்களிடையேயும் சிறந்த பாரம்பரியமுடையவர்களாகத் திகழும் சிலரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், இக்கருத்தை எல்லைக்குட்படுத்தியே செயற்படுத்த வேண்டும். அப்படி யில்லாது போனால் நிலையான அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி என்றால், ஆளும் கட்சியோடு முற்றிலும் முரண்பட்ட கட்சியாக இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. அப்படி இருப்பதும் இந்தத் தேசத்திற்கு நல்லதல்ல. எதிர்க்கட்சிகளில் சிறந்த முற்போக்கு எண்ணம் படைத்தவர்களாகவும், இந்த தேசத்தின் நம் வாழ்வில் நாட்டம் உடையவர்களாகவும், நல்ல முற்போக்கு பாரம்பரியம் உள்ளவர்களாகவும், இருப்பவர்களையும் தேர்ந்து எடுத்தனுப்புவது, ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்த உதவும். இது நம்முடைய கடமையும்கூட ஆனாலும் எதிர்க்கட்சி வேண்டுமே என்ற சம்பிரதர்யத்திற்காகப் பிற்போக்குச் சக்திகளுக்கு ஊக்கமும் உரிமையும் அளிப்பது விரும்பத்தக்கதல்ல.

பொதுவாக தனிமனிதன் தன் நலனை அடிப்படை யாகக் கொண்டே பெரும்பாலும் தன் இலாபத்திற்காகத் தன் வாக்கை உபயோகப்படுத்த நினைக்கிறான். அப்படித் தன்னலத்திற்காக உபயோகப்படுத்தப்படத்தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டானானால் வாக்காளர்களிடத்தில் சாதி, இன பொருளாதார பலவீனங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இத்தகைய பலவீனங்களிடையே, வாக்காளர்