பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொறுப்பு அதிகம். தனி வாழ்வு உணர்ச்சியிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சமுதாயப் பொதுவாழ்வு உணர்ச்சிக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் மக்களை வளர்த்துப் பக்குவப்படுத்தவே ஊராட்சி மன்றங்களும், ஊராட்சி மன்ற ஒன்றிப்புக்களும்.

தமிழர் வரலாற்றில் பஞ்சாயத்துசபை-ஊராட்சி மன்றம் புனிதமான ஒரு பேரவையாகவே இருந்து வந்தது. அவ்வாறே கருதப்பெற்று வந்தது. அண்ணல் சிவபெருமானுக்கும், ஆரூரருக்கும் இருந்த வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர் பஞ்சாயத்துச்சபை விசாரித்தது என்றால் பஞ்சாயத்தின் தொன்மைக்கும் தூய்மைக்கும் வேறென்ன சான்று வேண்டும்?

பல சுவர்கள் கடந்த-வீதி வேற்றுமைகளைக் கடந்த இவர் அவர் என்ற இரண்டாட்டு எண்ணங்களைக் கடந்த கிராம ஒருமைப்பாட்டின் சின்னமே பஞ்சாயத்து. அந்நிய ஆட்சியினாலும், பயன் தராத-பழங்கால சமுதாய அமைப்பின் வழிவழி வந்த பழக்க வழக்கங்களாலும் வலிவும் பொலிவும் இழந்து நிற்கும் கிராமத்திற்குப் புத்துணர்வும் புதுப் பொலிவும், புது வாழ்வும் கொடுப்பது பஞ்சாயத்து. இக்கருத்துடனேயே நமது அரசு பஞ்சாயத்தை-பஞ்சாயத்துக் கூட்டு மன்றங்களை அதிகமாக ஊக்குவிக்கின்றது; ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்குப் பஞ்சாயத்து முறை ஆழமாகவும் அகலமாகவும் செயற்பட்டிருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஆண்டுதோறும் ஒவ்வொரு பஞ்சாயத்தும் செய்து முடித்திருக்கிற வேலைகளை-நடைமுறைகளைப் பஞ்சாயத்துக் கூட்டு மன்ற ஆணையர் விமரிசனம் செய்து, அதைக் கூட்டுமன்றத்தில் வைத்து, அதன்பின் வட்டாரப் பஞ்சாயத்து அலுவலர்களுக்கு அனுப்பி, அவர்களின்