பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாங்கலாம் என்பதற்காகவும் கூட்டுறவு சங்கத்தில் பலர் சேர்கிறார்கள். ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வளரவில்லை. கூட்டுறவு சமூக நிறுவனம். குடியரசு நாட்டில் ஆட்சியும் அரசும் மக்களுடையது. நாட்டின் மூலதனத்தை நாம் விரும்பியவாறெல்லாம் பயன்படுத்தி அழித்தால் அந்நிய நாடுகளில் கடன் வாங்க வேண்டியதுதான்! வேறுவழி என்ன ? உண்மையில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றால் அதை எப்படி நிர்வகிப்பது என்ற பிரச்சனையைக் கூட்டுறவாளர்களிடம் விட்டுவிட வேண்டும். அவர்கள் விரும்பி, தேவை என்று கேட்டால் அரசு உதவி செய்யலாம். ஆனால், நமது நாட்டில் “கடன் வாங்குவதே திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காகத்தான்” என்ற பழக்கத்தை உருவாக்க மக்களில் ஒரு சிலரும், அரசும் முயன்று ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார்கள்! இந்த வெற்றியில் மக்களின் ஏழ்மையைத் தொடர் கதையாக்கி விட்டார்கள்.

அடுத்து, கூட்டுறவு நிறுவனங்கள் சீராக நடைபெற அரசின் கண்காணிப்பு அவசியம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு, அரசின் பிறிதொரு அலுவலகமாக மாறிவிடக்கூடாது. கூட்டுறவுத் துறையில் பணிசெய்யும் அரசு அலுவலர்கள், தணிக்கையாளர்கள் புலனாய்வு காவல்துறையினரைப் போலவும் “பிரேத விசாரணை” செய்பவர்கள் போலவும் ஆகிவிடக் கூடாது. அவர்கள் கூட்டுறவாளர்களுடன் இயல்பாகக் கலந்து நின்று பழகித் தவறுகள் நிகழ வாய்ப்பில்லாமல் தடுக்க வேண்டும். இல்லை! நிறைகளின் வழியில் இயக்கப்படுவதால், குறைகள் நிகழவே வாய்ப்பில்லாமல் தடுக்கப்படுதல் வேண்டும். யாரும் யார்மீதும் எளிதில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தலாம். அந்தக் குற்றங்கள் நிகழாமல் தற்காக்க தடுக்க அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை என்ன? முன்முயற்சி என்ன? என்பதே கேள்வி. ஆதலால், கூட்டுறவுத் துறையில் பணி செய்யும் அரசு அலுவலர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.