பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

75


முன்னேற்றத்திற்குரிய ஒரேவழி! ஒரே ஒருவழி! இன்று நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தீமை இழைத்துக் கொண்டு அழியும் பேய்களாக (Devil) மாறிவருகிறோம். இல்லை, இல்லை! பேய்கள்கூட இங்ஙனம் தம்முள் தீமை செய்து கொள்வதில்லை! ஆனால் மானுடம் அவற்றைவிடவும் கீழிறங்கிவிட்டது! இன்று வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வுகாணச் சிந்திக்காமல் சாதிகள், மதங்கள் இவற்றில் தொடர்பான வேற்றுமைகளை வளர்ப்பதில் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

காலம் அரிதானது. காலம் விண்ணில் சிறகு கட்டிக் கொண்டு பறக்கிறது. காலத்தை வீணாக்காது பயனுள்ள செய்யவேண்டும். இன்று தோன்றுவன புதிய-புத்தம் புதிய சிக்கல்கள்! பிரச்சினைகள்! புதிய பிரச்சினைகளுக்கு, முந்திய நூற்றாண்டுகள் விட்டுச் சென்றுள்ள சிந்தனைப் போக்கின் அடிப்படையில் ஒருபோதும் தீர்வு காணமுடியாது. சென்ற காலம் மறைகிறது; மறைந்து போகிறது. ஏன் அழியக்கூடச் செய்கிறது; வெற்று அழிவு அல்ல; அந்த அழிவில் புதிய ஆக்கம் தோன்றுகிறது. இதுவே உலகத்தியற்கை.

இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கும் பழைய முறை தீர்வுகளையும் முயற்சிகளையும் பின்பற்றுவதால்தான் நம்முடைய சமுதாயத்தில் வேறுபாடுகளும், வேற்றுமைகளும் அகலவில்லை. மருத்துவம் நடந்தது என்னவோ உண்மை! ஆனால் நோய் நீங்கியபாடில்லை! வறுமையும் ஏழ்மையும் அகல, பல பணிகள் செய்யப்பெற்றன, செய்யப்பெற்று வருகின்றன. ஆனால் வறுமையும் ஏழ்மையும் அகலவில்லை. நமது மக்களில் சரிபாதிப்பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்! ஏன் இந்த அவலம்? நமக்குச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற ஆர்வத்தைவிட நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நம்மை வளர்த்துக் கொள்ள