பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

77


வாழ்வியல் அமைப்பும் வளர்வதுபோல ஒரு தோற்றம் இருப்பது தெரிகிறது. இல்லை பரந்த ஜனநாயகக் கூட்டு வாழ்க்கைமுறை அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதும் அத்தகைய வடிவங்கள் இருப்பனவும் உண்மை. ஆனால், உள்ளீடுதான் இல்லை! கூட்டு வாழ்க்கை ஆன்மாக்களிடத்தில் தாக்கத்தை-விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் நம்மிடம் மறைந்து போயுள்ள - மறைந்துகொண்டு வருகின்ற ஒரு முக்கியமான பழக்கம், பலர் ஒன்று சேர்ந்து கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு குழுவாகப் பணியாற்றும் திறன்தான் என்பதாகும். ஒரே வழி கட்டுப்பாட்டு வடிவத்துடன் அமைந்த சில குழுக்களைப் பார்க்கிறோம். இந்தக் கட்டுப்பாடு, உயர் இலட்சியங்கள் இல்லாத தற்சார்புள்ள சிலரின் ஆதிக்க அடிப்படையில் முரண்பாடுகளை உள்ளடக்கிக்கொண்டு அமைந்துள்ள சந்தர்ப்பக் குழுக்களாகும். இந்த அமைப்புமுறை நீண்ட நெடுங்காலம் நிலவாது; மனித குலச் சிக்கல்களுக்கும் தீர்வு காணாது; சாதனைகளும் செய்யாது. இன்றைய உடனடித் தேவை - சமுதாய உணர்வைத் துண்டி வளர்த்து பாரத சமுதாய அமைப்பைக் காண்பதேயாகும்.

ஆன்மிகத் தன்மை வாய்ந்த உயிர்ப்புள்ள சமுதாய உணர்வு தேவை! நமக்குத் தேவை பருத்த உடல் அல்ல. திறமான, தரமான ஆன்மாக்களே தேவை. ஏன்? உடல் எப்போதும் தன்னலப் பற்றுடன் தனக்கு இன்பத்தையே எதிர்பார்க்கும்; நாடித் தேடி அலையும். ஆனால், ஆன்மா பிறர் நலனையே கருதக்கூடியது. இன்று சமயம் என்ற பெயரில் வளரும் மூடப் பழக்கங்களிலிருந்து மனித குலத்தை மீட்டுப் பிறருக்கு உழைத்தல் என்ற வேள்வி இயற்றவும், சமய நெறியைத் தொண்டு நெறியாக வளர்க்கவும் வேண்டும். மனித குலத்தின் நன்மைக்கு உழைப்பதில்தான் நமக்கு நலன்களும் உறுதிப்படுத்தப்பெறும் என்ற சிந்தனையை வளர்க்கவும், மனித குலத்தினிடையில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வளர்த்து இணக்கம் ஏற்படுத்தவும் வேண்டும்.