பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிகரத்திலே ஆணவத்தின் தீண்டல். விடுதலையைத் தரும் மலையின் சாரலில் ஆதிக்கத்தின் நடமாட்டம். அனுமதிப் பதற்கில்லை. அனுமதிக்க மாட்டோம். எல்லையில் தொல்லை விளைவிக்கும் சீன அரசாங்கத்தை ஒல்லையில் ஓடிப்போகும்படி செய்வது நமது தலையாய கடமை.

சுதந்திரத்திற்குப் பிறகு, நம்முடைய நாட்டின் பொது வாழ்வில் எங்கோ ஒரு தொய்வு ஏற்பட்டது. வேண்டாத வீண் போட்டிகள், தனிக்குடித்தன உணர்ச்சிகள் தோன்றி வளர்ந்தன. இவையெல்லாம் “எல்லையில் சீனன்” என்று கேட்டவுடன் எங்கோ ஓடி மறைந்து விட்டன. பாரததேசம் பொங்கி எழுந்து நிற்கிறது. கங்கு கரையற்ற தேசீய உணர்ச்சி! மக்களாட்சியின் தனிப்பெருந் தலைவராக - இந்நாட்டு மக்களின் நல்வாழ்வில் கரைந்து-கலந்து-ஒன்றாகி ஒருருவாக நிற்கும் மாசற்ற மாணிக்கமாகத் திகழும் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பின், மலர்ந்த முகத்துடன், மலைபோல் வீங்கிய தோள்களுடன் நிமிர்ந்த நடை போடுகின்றனர். உயிர் முதல் உடைமைவரை எந்த விலையையும் கொடுக்க அவர்கள் துணிந்து நிற்கின்றனர், தாயகத்தின் எல்லை காக்க.

எல்லையில் - போர்க்களத்தில் - காளையர் போர் புரிகின்றனர். இங்கு நமக்கென்ன வேலை? என்ற சிந்தனையில் நாம் செயல்பட வேண்டும். இத்தகு அவசர நிலையில் உள்நாட்டுச் சூழ்நிலையும் வலிமைப்படுத்தப் பெறவேண்டும். இந்த நேரத்தில் நமக்குள் அறிந்தோ, அறியாமலோ, தோன்றி உருவாகும் சில்லரைச் சிக்கல்களைத் தூக்கி மூட்டை கட்டி, நாட்டின் எல்லையில் எறிந்தால் சீனனை எறிந்தது போலாகும். நாட்டின் அமைதிக் காலத்தை விட அவசரக் காலத்தில் பல்வளங்களும் கொழிக்கும்படி செய்யவேண்டும். ஒன்றுக்குப் பத்தாக விளைந்து குவியும் செந்நெல் சீன அரசாங்கத்தை விரட்டும்! கழனியிலும், ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும் உழைப்பினால் ஆன பொருள்களைச் செய்து மலைபோல் குவிப்பது நமது கடமை.