பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

83



கேட்பதற்கே செவிகள், ஆனாலும் கேளத் தகாதனவற்றைக் கேட்டது கேட்டினை விளைவிக்கும். எப்பொழுதும், இல்லாத பொல்லாத வதந்திகளைக் கேட்கவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனாலும், “தீக்குறளைச் சென்றோதும்” வதந்திச் செய்தியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். அது அவர்களுடைய தொழில். அவர்களுக்குப் பொழுபோக்கும்கூட. ஆதலால் யுத்த சம்பந்தப்பட்டவரை வானொலிச் செய்திகளே சரியானவை என்று கருதிப் போற்றுதல் வேண்டும்.

பாரதம் சுதந்திர நாடான பிறகு நடைபெறும் முதல் மக்கள் யுத்தம் இது. நம்முடைய எதிரி போருக்கென்றே திட்டமிட்டு வளர்ந்தவன். நாமோ, மக்களின் நலன்களுக்குரியவற்றைத் திட்டமிட்டுச் செய்து முன்னேறியிருக்கிறோம். அதன் காரணமாகப் போர்முறை கடினமாக இருக்கும் என்று கருதுவதில் தவறில்லை. இத்தகு அவசரகால சந்தர்ப்பங்களில் எல்லோரும்-நாட்டுமக்கள் அனைவரும் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இயன்றவரை, எல்லோரும் போர்ப்பயிற்சியும் முதலுதவிப் பயிற்சியும் பெற வேண்டும். அப்படிச் செய்வது நமது கடமை.

நாம் உலக வல்லரசு நாடுகளை நோக்கிப் “பல ஆண்டுகளாகப் படைக் கலங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்-பாரில் சமாதானம் செழிக்க உதவி செய்யுங்கள்” என்று கூறி வந்தமையின் காரணமாக, நாம் படைக் கலங்களைத் தேவையான அளவிற்குத் தயார் செய்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவண்ணம், உலக மனித சமுதாயத்தினுடைய சுதந்திரத்தின் பகைவர்களாக - கொலையிற் கொடிய அரசாகத் திகழும் சீன அரசாங்கத்தை எதிர்த்துதாக்கியழித்து நாசமாக்கி- நம்மையும் நம்முடைய சுதந்திரத்தையும் அவ்வழியே மனித சுதந்திரத்தையும் காப்பாற்றும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதற்குரிய படைக்கலங்கள்