பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிறர்க்கென முயல்வதே பெரிய நோன்பெனச்
சங்கச் சான்றோன் சாற்றிய தறிக!
பைந்தமிழ்த் தேர்ப்பா கன்பா வேந்தன்
நன்றிது வென்று நயமொடு காட்டிய
நெறியினைத் தேர்ந்துஅஃ துரிமையாய்க் கொள்வோம்!
“உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை யிடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உனைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை!
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்”
என்று பாவேந்தன் இயம்பிய தறிக!
அன்று பாரதி புதியகோ ணங்கியாய்
“நல்ல காலம் வருகுது” என்றான்!
அடிமை நாட்டினில் அவன்வாழ்ந் தமையால்
“நல்ல காலம் வருகுது” என்று
எதிர்கா லத்தால் எடுத்துக் கூறினான்!
இன்றுநாம் யாவரும் சுதந்திர மக்கள்!
இன்றுநம் கடமை ஏற்றமார் படைப்பே!