பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

93


நல்ல காலத்தை நாம்படைத் திடுவோம்!
தமிழில் அறிவியல் தகவுறப் படைப்போம்!
“ஒன்று பரம்பொருள்; நாம்அதன் மக்கள்;
உலகு இன்பக் கேணி”என் றுரைத்த
மகாகவி பாரதி மகாவாக் கியத்தை
மன்பதை உலகின் வாழ்க்கை யாக்குவோம்!
எல்லா ருக்கும் எல்லாம் என்றிடும்
சமுதாய நீதியைச் சமைப்போம் வருகவே!

கவிஞர். அபிபுல்லா - அறிமுகம்


இந்தநூற் றாண்டு
காலமும் தூரமும் கடந்தநூற் றாண்டு!
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
அனைத்தையும் ஒன்றாய் இணைத்துச் சுருங்கிய
எல்லை யாக்கியது இந்தநூற் றாண்டு!
ஆதலால்,
பன்மொழிப் படிப்பும் பல்கலைப் படைப்பும்
வளர்ந்து மக்கள் மாண்புற வேண்டும்!
படிப்பின் தொடக்கம் பள்ளியி லாகும்!
படிப்பின் விரிவு வாழ்க்கையி லாகும்!
படிப்புஎக் காலமும் வேண்டிய தாகும்!
இறக்கும் நொடிக்கு முன்னரும் நூலினை
எடுத்துப் படித்த கிரேக்க நாட்டுச்
சிந்தனை யாளனின் செயலினை ஒர்க!
வான்புகழ் வள்ளுவம் சாந்துணையும் கற்க
என்றெடுத் தோதல் நன்றிவண் நினைக!
நாலிரு நூல்கள் வாங்குக எனவும்
படிப்பினை வளர்த்துக் கொள்க எனவும்
பொங்கல்நன் னாளில் பொங்கல் படைத்து
உண்ண விரைந்திடும் நம்மனோர்க் கெல்லாம்