பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

99


தேடிப் பிடித்துப் படித்திடு வீரே!
உடலின் அமைப்பு உழைப்பினுக் கேயாம்!
உழைத்திடும் உடம்பே உறுதி பெற்றிடும்!
உழைக்காத உடம்பு நோய்க்குண வாகும்!
உழைத்துத் தொழில்பல உவப்புடன் செய்வீர்!
புவியினர் நுகரும் பொருள்பல படைப்பீர்
சாத்திரம் புதுக்குவீர்! சழக்குகள் தவிர்ப்பீர்!
அறிவியற் பார்வை அனைத்திலும் தேவை
மண்ணில் விண்ணகம் மாண்புறப் படைக்கச்
செல்வம் பெருக்குவீர்! சிறந்த நியாயம்
தெரிந்துல கத்தோடு இசைந்துஒப் புரவால்
உயர்ந்து வாழுமின்! இதுவே கவிஞர்கள்
நந்தமக் குணர்த்திய நல்லசெய் திகளே!
நல்ல காலம் நனிவிரை வாகக்
காண்ப தென்பது எளிதா காது!
சந்து முனைகளில் சிந்துப் பாடல்கள்
திண்ணை வேதாந்தப் பேச்சுகள், உறக்கம்
வாரா நிலையில் வந்திடும் கனவுகள்,
இவைஒரு போதும் நல்லன அல்ல!
காலக் கொலைகள் தவிர்த்திடல் வேண்டும்!
கடுகி ஓடிடும் காலத்தைத் தடுத்து
நிறுத்தி வாழ்வுரு அளித்திடல் வேண்டும்!
கற்க நாடொறும் கற்க; கற்கவே!
கற்பது பருவ காலத் தொழில்அல்ல!
கற்பது வாழ்நாள் கடைமுறை தொடர்ந்து
நிகழ்ந்திட வேண்டிய நிகரிலா வேள்வி!
புதிய கருத்துகள் புத்துணர் வளிக்கும்
அறிவியல் காண்க! தொழில்நுட்பம் தேர்க!
மறைந்து கிடக்கும் வளங்கள் அனைத்தையும்
தொழில்திறத் தாலே வாழ்க்கைக் குப்பயன்