பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

115




        கோட்டை யாகிய தேவ கோட்டையில்
        தோன்றிய ஞானி "துறவு ஆண்டவர்"
        துறவு ஆண்டவர் பெருமையோ பெரிது!
        அவர்வழி வந்த அருளா ளர்பலர்
        அமர்ந்தருள் புரிந்த ஆதீனம், இது!
        இந்த ஆதீனக் குருபரம் பரையில்
        இற்றைநாள் ஞான பீடத் தமர்ந்து
        அருளாட்சி புரியும் அருட்பெருந் தகையர்
        காசி விசுவ நாத தேசிகர்!
        இவரோ,
        மாசிலா மனத்து மாண்பினர்; இறைவன்
        பூசனை மறவாப் புண்ணிய சீலர்
        நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பி
        ஞானப் பயிரினை வளர்க்கும் நாயகர்;
        அருள்நலம் சிறந்தவர் ஆன்மக் காட்சியர்
        அன்பால் நம்மையும் அரவணைத் தருளும்
        தாயிற் சிறந்த தன்மையர்! இவர்தாம்
        ஞான பீடம் ஏறிய நாள்இது!
        இந்தநன் னாளை, இவர்தம் பெருமையைப்
        போற்றுவ தாலே புகழ்நமக் காகும்!
        காசி விசுவ நாததே சிகரின்
        அரிய குணநலன் அனைவரும் பெறலாம்!
        தம்மை நமக்குத் தோழமை யாகத்
        தந்த பெருந்தகை! தமிழ்க்குலம் வாழ
        வந்த தமிழ்மா முனிவர் வாழ்கவே!
        எந்தை ஈசன் காளத்தி நாதன்
        இன்னருள் நினைந்து இனிதுபோற் றுதுமே!