பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

        உணர்வில் வேட்டனம். உயர்தமிழ் முதல்ல,
        மண்திணி ஞாலம் மாரியும் மறந்திடல்
        காணு கின்றனம் பேணிய சிறப்பின்
        நின்னயந் துறைநரும் நீநயந் துறைநரும்
        அல்லா தவரும் உள்ளமார் வேட்கை
        பிழைபட வின்றிப் பெற்றிடும் பெற்றிமை
        ஓர்ந்து நின்பால் சார்ந்தனம்
        கருதிய முடித்தல் கலைஞநின் கடனே!

(6)

திணை: பாடாண்திணை துறை: வாழ்த்தியல்

        மண்திணி ஞாலத் துள்மிக ஓங்கிய
        வடபெருங் கல்முதல் தென்கும ரிவரை
        ஒருநெறிப் படுத்தி முறைசெய் துயர்ந்த
        பலர்புகழ் பாரதம் நிலவுபே ரரசின்
        அவையினில் அணிசேர் அனைத்து மாநில
        மாண்பு மிகுமுதல் அமைச்சர்கள் அழகுற
        அமைந்த நல் லவையம் அதனிலே, திங்கள்
        திரிதரு ஞாலம் செழித்திடத் திட்டம்
        தீட்டிப் பணிகள் செய்தே பல்வளம்
        கொழித்திட ஏய்ந்த குறிப்பில் கொணர்ந்தனர்;
        நேமிசூழ் உலகறி நேருவின் புதல்வி
        பிறப்பால் பெண்ணே யாயினும் பேணும்
        திறத்தால் இப்பெருந் திருநா டாளும்
        இந்திரா அம்மையார் இயல்பினி லமைத்த
        நான்காம் திட்டத்து நந்தமிழ் நாட்டுச்
        சேலத் திரும்பு சேரா மையினால்
        பீடுசால் உரிமை பேணுநல் வேட்கையால்
        விடாமல் நெடிய மொழியது கூறி
        ஒப்பம் தராமல் இப்பெருந் தமிழக

கு.XIV.9.