பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

123


        தமிழ்நிலம் பொதுவெனப் பொறார்வழி வந்த
        தலைவ, நின் ஆற்றலும் பொதுவன்று நினக்கே
        உரியது என்று வரலாறு இயம்பும்
        புகழ்சால் தலைவ! தகைசால் கலைஞ!
        இளங்கோ வடிகள்தம் இனியநற் சிலம்பில்
        வாழி காவேரி! வாழி காவேரி!
        என்று வாழ்த்திய நந்தம் காவிரி
        மீட்கும்போர்த் தலைவ! வேட்டநின் காவிரிப்
        போரில் தமிழகம் திரண்டு நின்றிடும்!
        இஃதுறு தியென்றி யம்பவும் வேண்டுமோ?
        தமிழகம் செழிக்கத் தமிழர் வளர்ந்திட
        நாளும் பணிசெயும் நின்தமிழ்க் கொற்றம்
        வளர்க; வளர்க! வாழ்க! வாழ்க!
        நின்நலம் நந்தமக் கொருசொத் தாகும்!
        நலம்பல கண்டு நாளும் வாழ்கநீ!
        நாண்மங் கலம்நீ காணும்இந் நாளில்
        நின்கவ னத்தை ஈர்க்க விழைவது
        சங்ககா லத்துச் சான்றோன் காவிரிப்
        பூம்பட்டி னத்துக் காரிக் கண்ணனார்
        "நல்ல போலவும் நயவ போலவும்
        தொல்லோர் சென்ற நெறிய போலவும்
        காதல் நெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
        ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது"
        என்றநன் மொழியை இதயம்நீ கொள்கென
        நன்றே யுரைப்பது நங்கட னாகும்!
        யாஅம் இரக்கும் பரிசில்ஒன் றுண்டு!
        அஃது.இப் பாட்டுடைப் பொருளே!
        "இன்றே போல்க, நம் புணர்ச்சி"யென் பதுவே!