பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


10. ஆ. பத்மநாபன்

        மலரெனப் படுவது தாமரை மலரே!
        மன்னுல கத்தில் வாழ்ந்தவ ரென்று
        எண்ணப் படுபவர் மிகமிகச் சிலரே!
        அந்தச் சிலருள் இந்த உலகினை
        உய்த்துச் செலுத்துபவர் ஒரிருவரே!
        "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”
        என்றுநல் லுறவு, கொண்டு வாழ்ந்தது
        மூத்த தமிழ்க்குடி முன்னாள் பின்னாள்
        புற்று நோயெனப் புகுந்தது சாதி!
        சாதிச் சழக்கின் பரிணாம வளர்ச்சியே
        தீண்டாமை யாகித்தேசம் கெடுத்தது!
        எல்லா உயிர்க்கும் தந்தை, தா யானவன்
        எந்நாட் டவர்க்கும் உரிய இறைவன்
        கோயிலில் மூத்த தமிழ்க்குடி புக்கு
        ஊனும் உயிரும் உருக வழிபடும்
        உரிமை பறிக்கப் பட்டது! அதனால்
        அடிமைத் தனமும் நுழைந்தது! அயர்ச்சிகள்
        அனைத்தும் வந்தே அணைந்தன! இந்த
        இழிநிலை எதிர்த்(து)ஏற்புடைக் களம்கண்டு
        விடுதலை வேண்டிப் போரா டியமுதல்
        தலைமக னாவார் திருநாளைப் போவார்
        நந்தம் சென்னியில் வைத்துநாம் போற்றும்
        புகழ்த்திரு நாளைப் போவார் அற்றைநாள்
        பண்ணை யடிமை முறையை நீத்தார்!
        திருக்கோயில் நுழைவுக் கும்போ ராடினார்!
        திருப்புன் கூரில் தோல்விகண் டாலும்
        தில்லையின் எல்லையில் வெற்றியே பெற்றர்
        உயர்குடிப் பிறந்தோர் உறுசெருக் கொழிந்து