பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்கலும்

141



20. விடுதலைநாள் வாழ்த்து

        "பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும்
        நற்றவ வானினும் நனிசிறந் தனவே!"
        என்றான் கவிஞன் பாரதி; அவன்றன்
        அடிச்சுவட் டினில்நடை போடுவோம் வாரீர்!
        சாதி குலப்பகைச் சண்டைக ளுக்கொரு
        முடிவு கட்டுவோம்! விடிவு காணுவோம்!
        இவர்தே வர் இல்லை அவர்தே வர்'எனக்
        கலகம் செய்து கழிவெறி யூட்டி
        மருட்டு கின்ற மதப்பிணக் குகளை
        மண்ணிலே போட்டு இன்னே மூடுவோம்!
        மானுடம் பேசி மகிழ்ந்திடப் பலமொழி
        கற்றுத் தெளிவோம்! மனிதம்ஒன் றாவோம்!
        இங்குள அனைவரும் இந்திய ரே, யென
        ஒருமனப் பாட்டுடன் கூடிவாழ்ந் திடுவோம்!
        கூட்டுற வதனில் கூடித் தொழில்செய்து
        பொதுவுடை மைச்சமு தாயம் பூத்திட
        வாயில் அமைப்போம்! வறுமையைப் போக்கி
        வளம்பல படைப்போம்! உலக அரங்கினில்
        நமதுநன் னாட்டு பெருமையை உயர்த்துவோம்!
        தாயின் மணிக்கொடி உயர்த்திப் பிடிப்போம்!
        இமயம் முதல்தென் குமரி வரை புகழ்
        மண்டிக் கிடக்கும் இந்திய நாட்டைப்
        போற்றி மகிழ்வோம்! இப் புண்ணிய நாளிலே!