பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


21. பொங்கல் வாழ்த்து

        பூவுல கினிற்புகழ் சிறந்தது தமிழ்நிலம்!
        கல்தோன்றி மண்தோன் றாக்கா லத்தே
        முன்தோன்றி மூத்த குடி-தமிழக் குடியாம்!
        சிந்தையிற் சிறந்து செயலில் விளங்கு
        புகழ்படைத் திட்ட பொன்வர லாறு
        முந்தையோர் தமக்குச் சொந்த மாகும்!
        இன்றைய நிலைமை என்ன? எண்ணுவோம்!
        வாழ்க்கைக்(கு) இலக்கணம் கண்ட மாண்பார்
        தமிழர்தம் வாழ்வில் இலக்குகள் இல்லை!
        இலக்கிய மில்லை! இலக்கண மில்லை;
        தமிழ்மொழிக் குப்பின் தோன்றிய மொழிகள்
        புதிய கலைகளால் பொலிவுபெற் றுள்ளன!
        ஆனால், தமிழ்த்தாய் பட்டிமன் றங்களில்
        கவிதைகள் கதைகளில் சுழன்றுழல் கின்றாள்!
        வான மளந்த தனைத்தும் அளந்திடும்
        ஆற்றல் மிகுந்த தொழில்திறன் அனைத்தும்
        அன்னைத் தமிழில் அமைந்திடு கின்ற
        பேற்றினை இன்னும் பெற்றோ மில்லை!
        தாயாய் இருந்து வளர்க்கும் தமிழ்த்தாய்
        கல்வி மொழியாம் தகுதிபெற் றாளிலை!
        அவள்தம் வீட்டில் அவள்முழு உரிமை
        பெற்றா எளில்லை இற்றைநாள் வரைக்கும்!
        இடையிலே வந்த ஆங்கி லச்சியும்
        நடுவிடு அமர நாழிகை பார்த்துக்
        கொண்டுநிற் கின்ற இந்தியும் தமிழ்க்குத்
        தரும் நெருக் கடியையும் அவ்வழித் தமிழரின்
        வருங்கா லத்து வாழ்வுச் சரிவையும்
        எண்ணிப் பார்த்திடும் இதயமும் உண்டா?