பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

இணைத்துக் கூறும் சில வரிகள் அடிகளாரின் ஒப்பியல் சிந்தனைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. 'தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரதந் தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தியைப் போற்றிப் பாடியவன் மகாகவி பாரதி'; அம் மகாகவி பொதுவுடைமையையும் போற்றியவன். யாமறிந்த புலவரிலே வள்ளுவரைப் போல் உயர்ந்தோர் இல்லை என்று முழங்கியவன். இவை அனைத்தையும் உள்ளடக்கி அடிகளார் இதோ கவிஞராக மாறிப் பின்வருமாறு உரைப்பார்:

'வள்ளுன் சிந்தனை, காரல் மார்க்ஸ்
மாமுனி சிந்தனை இரண்டும் சேர்ந்த
ஏற்றமார் ஏந்தல் காந்தியடிகள்
கவினுறு கருத்தும் சேர்ந்த முழக்கம்
கவிஞன் பாரதி முழக்கம்'

எனப் பாரதியை அறிஞர் பலரோடு ஒருங்கிணைத்து உருவாக்கம் செய்து மகிழ்வார்.

அடிகளார் திருக்குறள்பால் ஆறாத பற்றுக் கொண்டவர். வள்ளுவ நெறியை வையகம் எங்கும் திருக்குறள் பேரவை மூலம் பரப்பிய செந்தமிழ்ச் செம்மல். கவியரங்கங்கள் மூலம் திருவள்ளுவரின் சிறப்பையும் அவர்தம் சிந்தனைகளையும் தம் கூரிய சொற்களால் சமுதாயத்திற்கு வழங்கியவர். அறநெறி வள்ளுவன் படைக்கும் உலகம் புதுமை உலகம், வேறுபாடுகளைக் கடந்த பேருலகம். சிறைகள் அற்ற சிந்தனை உலகம் எனப் பாராட்டுவார்.

வள்ளுவ நெறியை விழாஎடுத்துப்போற்றுவதை விடவள்ளுவநெறி உணர்ந்து வாழ்வதே நம் கடமை என முழங்கியவர் அடிகளார்.

"எமது அருமைத் தமிழக மக்காள்,
போதும், போதும் வெறும்வழி பாடு!
போதும், போதும் விழவொலி பாட்டும்
போதும், பட்டிமன்றமும் போதும்!
செவிகள் காய்த்துப் போன செய்திகள்
போதும், போதும்" என்றே புகல்வான்
எழுக, வள்ளுவத்தை வாழ்வில் ஏற்றிடுக!
வள்ளுவன் கண்ட புதுமை உலகம்
காண்போம், மாண்புகழ் சேர்ப்போம் இனியே!

என்று செயல் வடிவத்திற்கு முதன்மை அளிப்பார்.

வள்ளுவர் "அடித்து வளர்க்கும் ஆசான் அல்லன் அனைத்தும் கோழை ஆக்குவோன் அல்லன் துறைதோறும் துறைதோறும் மனிதனைத் தூண்டி உயிரில் கலந்து உடலில் கலந்து வளர்த்திருக்கின்ற பேராசிரியன்" என்பார். கவியரங்கங்களில் அடிகளார் கவிஞர்களை