பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


26. சுந்தரம் அடிகள்! கேள்!

ஞாலந் தன்னை வாழ்வித் தருளும்
குலதெய்வம் குமரன் புகழ்பரவும்
கொங்கு நாட்டுக் கெளமார மடம்தனில்
அதிபதியாய், ஆதீன கர்த்தராய்
இருந்தருளிய சுந்தரத் தமிழ்முனிவ!
சுந்தரம் அடிகள்! கேள்!
அன்று சுந்தர ருக்குத் தோழனாய்
இறைவன் வந்தான்!
இந்த இப்புவியில் நந்தமக்கு, வாய்த்த
தோழன் நீ!
அவினாசிப் பயண மாளிகையில்
நாம் உண்ண நீ உண்ணா நோன்பு கொண்ட
கெழுதகை நட்புள்ளம்
நாடறியாத நற்றிறப் பண்பு!
கோவை விமான நிலையத்தில் இறங்கி
எங்கோ செல்லஇருந்த நம்மை வழிமறித்து
அரசியல் சாராவண்ணம் செய்த
நின்தோழமைக்கு ஏது கைம்மாறு?
சுந்தரம் அடிகள்! கேள்!
இனி இப்புவியில் யார் தோழர்?
"குன்றக்குடியின் குரல்நீ - என்று
கயிலைக் குருமணி உவந்து பாராட்டினார்!
ஐய, திருப்பணி நாயக!
கவிமழை பொழியும் கொண்டலே!
சேக்கிழாரை நீ விரித்துரைத்த பாங்கதனை
இனியாரிடம் கேட்பது?
என்ன கொடுமை!
கூற்றுவனும் நொதுமலாளன் அல்ல போலும்!