பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


29. கண்ணதாசன் புகழ் வாழ்க!

பூமண் டலத்தில் புரியாப் புதிர்பல!
தமிழ்த்தா யின்தண் ணளியினில் தழைத்து
உயர்தமிழ்க் கவிஞனாய் ஒங்கி நின்றவன்;
வையத் தினைவழி நடத்தி வாழ்ந்திடும்
கவிஞர் குலத்தின் அரசாய்த் திகழ்ந்தவன்;
எண்ணிலா நலன்கள் இனிதுறப் பெற்றவன்
குழைந்திடும் குழந்தை மனம்ப டைத்தவன்;
கொழித்திடும் கவிதை உள்ளம் கொண்டவன்;
புயலென வீசிய அரசியல் உலகிலும்
எதற்கும் அர்த்தம் எடுத்துக் கூறியும்
நந்தா விளக்காய் நம்மிடை வாழ்ந்தவன்;
கண்ண தாசன், கவிஞர் கோமான்;
பாரதி பாரதி தாசன் வரிசையில்
இடம்பிடித் தோங்கி இனிதே அமர்ந்தனன்
கவியர சாகிய கண்ண தாசனை
இழந்தே இன்ன லுற்றுத் தமிழகம்
நின்றழு கின்றது! நிலையிழந் ததுவே!
கண்ண தாசன் உயிர்கொண்ட கள்வன்
காலன்நம் கண்ணிற் படுவா னாயின்
அவனுயிர் வெளவும் ஆத்திரம் உண்டு!
என்ன செய்வது? இயற்கையின் நியதி!
கண்ண தாசன் புகழ்வா ழியவே!