பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

169


7. கற்றலின் கேட்டலே நன்று

உலகந் தழிஇய ஒட்பம் பெறுதல்
அறிவிற் கறிவா கியநல் லணியாம்!
நானி லத்து நான்கு திசையிலும்
ஆன்றலிந் தடங்கிய கொள்கைச்சான் றோரிடம்
வணங்கிய வாயின ராய்க்கேட் டறியும்
அறிவே ஆளும் அறிவெனப் படுமே!
தம்மின் மூத்த தகைஅறி ஞருடன்
கலந்து பேசித் தெளிந்திடல் அறிவு!
அறிவிற் கெல்லாம் மேம்பட்ட அறிவு!
கற்றலிற் கேட்டலே நன்றெனும் பொருளுரை
தேர்க! நன்கு சிந்தையுள் தெளிக!
மானுடம் பெற்றவை செவியிரண் டாகும் .
எதிர் எதிர்த் திசையினில் இருப்பன அவைதாம்;
தாழும் தடையும் இலாத அச் செவிகளால்
கேட்பன வெல்லாம் கேட்டறிந் திடுக!
என்பதே இறைவன் ஆணைஎன் றறிகவே!

கு.XIV.12.