பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

171


9. பகுத்தறிவு

கற்பன கேட்பன உணர்வன யாவும்
உறுதி பயக்கும் உயர்அறி வாகி
விடும்என் பதில்லை; மேலாம் தேன்சுவைப்
பலாவின் சுளையைப் பக்குவ மாகத்
திருத்தி யெடுத்துச் சுவைப்பதே முறையாம்!
நன்றும் தீதும் உண்மையும் பொய்யும்
பயனும் பதரும் கலந்த நிலையில்
தீமையும் நன்மையும் தேர்ந்து தெளிந்து
வாழ்விற் குறுதுணை யாக அமைந்திடும்
அறிவினைத் தேர்த லேபகுத் தறிவு!
ஆசிரி யன்புகழ் நூலுக்குச் சான்றாகா(து)
உண்மைக்(கு) உரைகல் உரைப்பவன் புகழன்று
வாழ்வினுக்(கு) அணியாய் விளங்கும்
அறிவினைத் தேர்தல் தான்பகுத் தறிவே!