பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

197


32. கடமையே மூச்சு!

நான் முடிவாகத் தீர்மானித்து விட்டேன்
கடந்தகாலத் தவற்றுக்குக் கழிவிரக்கம் கொள்ளப் போவதில்லை. எதிர்வரும் சாதனைகளுக்கே முயற்சிகள் அனைத்தும்
வாழ்வில் பல செய்ய எண்ணுகிறோம்.
ஆனாலும், முதன்மையான மக்கட் பணியை
முதலிடத்தில் வைத்து முழுமூச்சுடன்
தாழா முயற்சியை மேற்கொள்வோம்!
நான் மகிழ்வுடன் கடமையைச் செய்வேன்!
நான் என் அமைதியை இழக்கக் கூடிய எதையும்
வாழ்க்கையில் குறுக்கிட அனுமதியேன்!
என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்கும்
எனக்கு ஏது பொழுது அடுத்தவர்பற்றிப் பேச?
சிறந்ததையே நினைப்பேன்!
சிறந்ததற்கே எனது பணி!
சிறந்ததன் பயனும் அனைவருக்கும் உரிய தாக்குவேன்! மனிதர்க்கு உற்ற நண்பனாக விளங்குவேன்!
நல்லதன்பக்கமே நிற்பேன்!
உண்மையே எனது வாழ்வு!
அன்பாக இருப்பேன்!
நான் சந்திக்கும் ஏமாற்றங்களை
ஊக்கந்தரும் உயிருட்டங்களாகப் போற்றுவேன்! கருமேகங்களிடையிலும் ஒளியைத் தேடுவேன்!
எப்போதும் புன்முறுவல் காட்டி
எதிர்காலத்தை எதிர்நோக்கி
எனது வாழ்க்கையை நகர்த்துவேன்!
எடுத்த முடிவு தோல்வி காணாவண்ணம்
உழன்றும் உழைப்பேன்!
கடமையே மூச்சு! பணியே வாழ்வு!