பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

211


45. அழகுக் களஞ்சியம்!


ஆழிசூழ் உலகின் அழகு அளப்பில!
ஓங்கி உயர்ந்த மலைகள்!
உறங்கிக் கிடக்கும் பள்ளத் தாக்குகள்!
சுற்றிச் சுழன்றும் வரும் சமவெளிகள்!
இந்த உலகை வலம் வரும் ஆறுகள்!
நீலத் திரைக்கடல்கள்! நீல வான்!
உருக்கிவார்த்த வெள்ளிக் கட்டியென விளங்கித்
தண்ணிலவு பொழியும் நிலா!
கண்களைச் சிமிட்டிடும் விண்மீன்கள்!
பசும்புற்கள்! வண்ண வண்ணப் பூக்கள்!
சித்திரத்தில் சிறந்த மரங்கள்!
பார்வைக்கு இனிய விலங்குகள்!
கருணை நிறைந்த பறவைகள்!
எவ்வளவு அழகு!
அழகின் களஞ்சியம் இந்த உலகம்!
அழகான இந்த உலகில் உள்ள ஒரே ஒரு ஆபாசம்
மனிதனின் நடத்தையே!
மனிதனும் இயற்கையே!
மனிதன் இயற்கையின் அழகைத் தவறாகப்
பயன்படுத்துகிறான்!
மனிதரில் சிலர் வாழ்வாங்கு வாழ்கின்றனர்.
மனிதன் தன்னையே பிரதிபலிக்கும்
ஒரு கண்ணாடி!